கொளத்தூர் அருகே பயங்கரம்:பஸ் டிரைவர் சம்மட்டியால் அடித்துக்கொலை-ஒருவர் கைது; உறவினருக்கு வலைவீச்சு


கொளத்தூர் அருகே பயங்கரம்:பஸ் டிரைவர் சம்மட்டியால் அடித்துக்கொலை-ஒருவர் கைது; உறவினருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 5 May 2022 2:56 AM IST (Updated: 5 May 2022 2:56 AM IST)
t-max-icont-min-icon

கொளத்தூர் அருகே தனியார் பஸ் டிரைவர் சம்மட்டியால் அடித்துக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டார். உறவினரை போலீசார் தேடி வருகின்றனர்.

கொளத்தூர்:
கொளத்தூர் அருகே தனியார் பஸ் டிரைவர் சம்மட்டியால் அடித்துக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டார். உறவினரை போலீசார் தேடி வருகின்றனர்.
இந்த பயங்கர கொலை குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
பஸ் டிரைவர்
சேலம் மாவட்டம் கொளத்தூரை அடுத்த பாலவாடியை சேர்ந்தவர் பொன் குமார் (வயது 33). இவர், தனியார் பஸ் டிரைவர். மனைவியை பிரிந்து வாழ்ந்து வருகிறார். பாலவாடியில் உள்ள தனது வீட்டில் தூங்கிய அவர், நேற்று காலையில் நீண்ட நேரம் ஆகியும் வீட்டை விட்டு வெளியே வரவில்லை. இதில் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் வீட்டுக்குள் சென்று பார்த்தனர்.
அங்கு கட்டிலில் தலையில் பலத்த காயத்துடன் ரத்த வெள்ளத்தில் பொன்குமார் இறந்து கிடந்தார். கொளத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்மட்டியால் அடித்துக்கொலை
தகவல் அறிந்த மேட்டூர் துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பொன்குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு மேட்டூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பொன்குமார் கொலை செய்யப்பட்ட இடத்தில் சம்மட்டி ஒன்று கிடந்தது. நள்ளிரவில் வீடு புகுந்த நபர்கள் சம்மட்டியால் தாக்கி பொன்குமாரை கொலை செய்ததும், ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் இந்த கொலையில் ஈடுபட்டு இருப்பதும் விசாரணையில் தெரிய வந்தது.
திடுக்கிடும் தகவல்கள்
இதுதொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அதன் விவரம் வருமாறு:-
கொலை செய்யப்பட்ட பொன்குமாரின் உறவுக்கார பெண் கவிதா. இவருக்கு திருமணம் ஆகி 2 குழந்தைகள் உள்ளனர். கவிதாவுக்கும், அவருடைய கணவர் செல்வகுமார் (36) என்பவருக்கும் தகராறு இருந்து வந்தது. செல்வகுமார் சென்னையில் ஒரு ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
கணவன்- மனைவி தகராறில் செல்வகுமார் தன்னுடைய வீட்டை பூட்டி விட்டு சாவியை எடுத்து சென்றுள்ளார். பிள்ளைகளுக்கான புத்தகங்கள், துணிமணிகள் வீட்டுக்குள் இருப்பதாகவும், இதனால் சிரமமாக இருப்பதாக தன்னுடைய சித்தப்பா உறவுமுறையான பொன்குமாரிடம் கவிதா கூறியுள்ளார்.
தீர்த்துக்கட்டினர்
இதையடுத்து பொன்குமார், கவிதா வீட்டுக்கு சென்று கதவை உடைத்து, துணிமணிகள், பிள்ளைகளுக்கான புத்தகங்களை எடுத்து கொடுத்துள்ளார். இதனை அறிந்த செல்வகுமார், பொன்குமார் மீது கோபம் கொண்டதாக கூறப்படுகிறது. 
உடனே சென்னையில் இருந்து புறப்பட்டு வந்த அவர், தன்னுடைய நண்பர் வெடிக்காரனூரை சேர்ந்த குமார் (26) என்பவருடன் சேர்ந்து பொன்குமாரை சம்மட்டியால் அடித்துக் கொலை செய்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக குமாரை போலீசார் கைது செய்தனர். செல்வகுமாரை தேடி வருகின்றனர். இந்த கொலை கொளத்தூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
உடலை வாங்க மறுப்பு
இதற்கிடையே கொலை செய்யப்பட்ட பொன்குமார் உடலை வாங்க உறவினர்கள் மறுத்தனர். இதனால் மேட்டூர் அரசு ஆஸ்பத்திரியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு பொன்குமார் உடலை வாங்க உறவினர்கள் சம்மதம் தெரிவித்தனர்.

Next Story