நீலகிரி மாவட்டத்தில் 6,973 பேர் பிளஸ்-2 தேர்வு எழுதினர்
நீலகிரி மாவட்டத்தில் 6,973 பேர் பிளஸ்-2 தேர்வு எழுதினர்.
ஊட்டி
நீலகிரி மாவட்டத்தில் 6,973 மாணவ- மாணவிகள் பிளஸ்-2 தேர்வு எழுதினர்.
பிளஸ்-2 பொதுத்தேர்வு
கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பள்ளி மாணவர்களுக்கு ஆண்டு இறுதித்தேர்வு முழுமையாக நடத்த முடியவில்லை. மேலும் பள்ளிகளில் நேரடி வகுப்புகள் நடத்த முடியாததால், ஆன்லைன் வகுப்புகள் வழியாக பாடங்கள் நடத்தப்பட்டன.
இந்த நிலையில் தற்போது கொரோனா பரவல் கட்டுப்பாட்டுக்குள் உள்ளதால் இந்த ஆண்டு எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்த அரசு முடிவு செய்தது.
இதன்படி பிளஸ்-2 மாணவர்களுக்கு நேற்று பொதுத்தேர்வு தொடங்கியது. இதன்படி நீலகிரி மாவட்டத்தில் மொத்தம் 39 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. நேற்று 6,973 மாணவ- மாணவிகள் தமிழ் முதல் தாள் உள்பட மொழிப்பாட தேர்வு எழுதினர். 317 பேர் தேர்வு எழுத வரவில்லை.
முககவசம்
தேர்வையொட்டி மாணவ- மாணவிகள் சிலர் காலையிலேயே கோவிலுக்கு சென்று விட்டு வந்தனர். மேலும் சில வீடுகளில் பிரார்த்தனை செய்துவிட்டு வந்தனர். இதை தொடர்ந்து தேர்வு வளாகத்திற்குள் வந்தவுடன் நண்பர்களுடன் தாங்கள் படித்த பாடங்கள் குறித்து மும்முரமாக விவாதித்துக் கொண்டனர்.
தேர்வு மையத்தில் மாணவ-மாணவிகளுக்கு கிருமிநாசினி வழங்கப்பட்டது. மேலும் சமூக இடைவெளியுடன் அமரும் வகையில் மேசை, நாற்காலிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
தேர்வர்களில் பெரும்பாலானோர் முககவசம் அணிந்து இருந்தனர். பொதுத்தேர்வையொட்டி மாவட்ட கலெக்டர் அம்ரித், ஊட்டி புனித சூசையப்பர் மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த தேர்வு மையத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்தார்.
எளிதாக இருந்தது
இதை தொடர்ந்து தேர்வு எழுதிவிட்டு வந்த மாணவர்கள் சக்திவேல், சூர்யா ஆகியோர் கூறுகையில், தேர்வு ஆரம்பிக்கும் முன்னர் ஒருவித பதற்றம் இருந்தது.
ஆனால் வினாத்தாள் எளிதாக இருந்ததால் மகிழ்ச்சியுடன் தேர்வை எழுதினோம். இதன்காரணமாக உற்சாகம் கிடைத்துள்ளது. இனிமேல் வரும் தேர்வுகளையும் நன்றாக எழுத முடியும் என்ற நம்பிக்கையை வந்துள்ளது என்றனர்.
Related Tags :
Next Story