வேடசந்தூரில் பொதுமக்களை அச்சுறுத்திய ஒற்றைக்குரங்கு பிடிபட்டது
வேடசந்தூரில் பொதுமக்களை அச்சுறுத்திய ஒற்றைக்குரங்கு பிடிபட்டது.
வேடசந்தூர்:
வேடசந்தூரில் உள்ள அண்ணாநகர், காந்திநகர், கலைஞர்நகர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில மாதங்களாக ஒரு குரங்கு அட்டகாசம் செய்து வந்தது. இந்த குரங்கு கடைகள், வீடுகளுக்குள் புகுந்து தின்பண்டங்களை தூக்கி சென்று விடும். பொதுமக்கள் யாராவது விரட்டினால் அவர்களை துரத்தி வந்து கடித்தது. இவ்வாறு பொதுமக்கள் மற்றும் சிறுவர், சிறுமிகளை அச்சுறுத்தி வந்த ஒற்றைக்குரங்கை பிடித்து வனப்பகுதியில் விடவேண்டும் என்று அய்யலூர் வனத்துறைக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதையடுத்து அய்யலூர் வனத்துறையை சேர்ந்த வனவர் ராமசாமி, வனக்காப்பாளர்கள் ராஜேந்திரன், சவரியார் உள்ளிட்ட வனத்துறையினர் நேற்று காலையில் இருந்து ஒற்றைக்குரங்கை தேடினார்கள். இந்தநிலையில் இன்று மாலை வேடசந்தூர் காந்திநகர் தங்கமுனியப்பன் கோவில் அருகே ஒற்றைக்குரங்கு வந்தது. எனவே வனத்துறையினர் அதை கூண்டு வைத்து பிடிக்க முயன்றனர். அப்போது குரங்கு வனத்துறையினர் மீது பாய்ந்து கடிக்க முயன்றது. இதையடுத்து நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு கூண்டுக்குள் குரங்கு சிக்கியது. பின்னர் அந்த குரங்கை வனத்துறையினர் அய்யலூர் பகுதியில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் விட்டனர். குரங்கு பிடிபட்டதால் பொதுமக்கள் நிம்மதியடைந்தனர்.
Related Tags :
Next Story