பலத்த காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் 5 ஆயிரம் வாழை மரங்கள் சாய்ந்தன
பலத்த காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் 5 ஆயிரம் வாழை மரங்கள் சாய்ந்தன
சேவூர்:
சேவூர் பகுதியில் வீசிய பலத்த காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் 5 ஆயிரம் வாழை மரங்கள் சாய்ந்தன.
சூறாவளி காற்று
சேவூர் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு சூறாவளி காற்று வீசியது. ஆனால் மழை பெய்யவில்லை. இந்த காற்றுக்கு பல்வேறு இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. சில பகுதிகளில் மரங்கள் முறிந்து மின்கம்பியில் விழுந்ததால் மின்தடை ஏற்பட்டது. இதையடுத்து வேரோடு சாய்ந்த மரங்கள் அப்புறப்படுத்தப்பட்டன. அது மட்டுமல்ல பலத்த காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் வாழைகளும் முறிந்தன.
வேட்டுவபாளையம் ஊராட்சி அசநல்லி பாளையம் பகுதியில் வாழை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த வாழைகள் குலைதள்ளிய நிலையில் இன்னும் ஓரிரு மாதங்களில் வாழைத்தார்களை வெட்டலாம். அந்த அளவுக்கு வாழை குலைதள்ளி ஓரிரு மாதங்கள் ஆகிவிட்டன. எனவே அடுத்த மாதம் வாழைத்தார்களை வெட்டலாம், வருமானம் கிடைக்கும் என எதிர்பார்த்து காத்திருந்த விவசாயிகளுக்கு சூறைக்காற்று பேரிடியாக அமைந்துவிட்டது.
5 ஆயிரம் வாழைகள் முறிந்தன
சூறைக்காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் 5 ஆயிரம் வாழைகள் முறிந்தன. குறிப்பாக தங்கவேல், பொன்னுசாமி, பிரமகலா, வெங்கடாச்சலம் ஆகியோர் சாகுபடி செய்யப்பட்டிருந்த வாழைகள் முறிந்தன. இதையடுத்து வாழை மரம் சேதங்களை கணக்கெடுக்கும் பணியில் வருவாய்த்துறையினர் ஈடுபட்டனர்.
இது குறித்து விவசாயிகள் கூறுகையில், ஒரு மாதத்தில் அறுவடை செய்யும் நிலையில் இருந்த வாழை மரங்கள் காற்றின் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் சாய்ந்தன. இதனால் பல லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. விவசாயிகளின் நிலை உணர்ந்து, எங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றனர்.
Related Tags :
Next Story