28 ஆயிரத்து 369 மாணவ மாணவிகள் பிளஸ் 2 பொதுத்தேர்வை எழுதினர்


28 ஆயிரத்து 369 மாணவ மாணவிகள் பிளஸ் 2 பொதுத்தேர்வை எழுதினர்
x
தினத்தந்தி 5 May 2022 10:47 PM IST (Updated: 5 May 2022 10:47 PM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலை மாவட்டத்தில் 28 ஆயிரத்து 369 மாணவ-மாணவிகள் பிளஸ்-2 பொதுத்தேர்வை எழுதினர். தேர்வு மையங்களை கலெக்டர் முருகேஷ் ஆய்வு செய்தார்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டத்தில் 28 ஆயிரத்து 369 மாணவ-மாணவிகள் பிளஸ்-2 பொதுத்தேர்வை எழுதினர். தேர்வு மையங்களை கலெக்டர் முருகேஷ் ஆய்வு செய்தார். 

பிளஸ்-2 பொதுத் தேர்வு

தமிழகத்தில் பிளஸ்-2 மாணவ, மாணவிகளுக்கான பொதுத் தேர்வு இன்று தொடங்கியது. 

இந்த தேர்வு வருகிற 28-ந் தேதி (சனிக்கிழமை) வரை நடைபெற உள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் அரசு பள்ளி, தனியார் பள்ளி, நிதியுதவி பெறும் பள்ளி என 252 பள்ளிகளை சேர்ந்த 14 ஆயிரத்து 503 மாணவர்களும், 14 ஆயிரத்து 912 மாணவிகளும் என 29 ஆயிரத்து 415 பேரும் தேர்வுக்கு விண்ணப்பித்து இருந்தனர். 

அதேபோல் தனித்தேர்வர்கள் 1280 பேர் விண்ணப்பித்து இருந்தனர். 

இந்த தேர்விற்காக பள்ளி தேர்வர்களுக்கான 115 தேர்வு மையங்களும், தனித்தேர்வர்களுக்கான 5 தேர்வு மையங்களும் அமைக்கப்பட்டு இருந்தன.

 தேர்வுக்கான அடிப்படை வசதிகள் திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் மற்றும் பள்ளிக்கல்வித்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

முதன்மை கண்காணிப்பாளர்கள்

இன்று காலை பொதுத்தேர்வு எழுதும் பிளஸ்-2 மாணவ, மாணவிகள் மிகவும் ஆர்வத்துடன் தேர்வு மையங்களுக்கு வந்தனர். முன்னதாக அவர்கள் வீட்டிலும், வீட்டின் அருகில் உள்ள கோவில்களிலும் வழிபாடு செய்தனர். 

பின்னர் தேர்வு மையத்தின் வளாகத்தில் அமர்ந்து கடைசி நிமிடம் வரை வீண் செய்யாமல் மாணவர்கள் படித்தனர். இதனால் மாணவர்கள் மிகவும் பரபரப்பாக காணப்பட்டனர்.

 மாணவர்களை அவர்களது பெற்றோர், ஆசிரியர்கள், தேர்வு மைய கண்காணிப்பாளர்கள் வாழ்த்தினர்.

 9.45 மணியளவில் மாணவர்கள் தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்பட்டனர். மாணவர்கள் தேர்வு அறைக்குள் செல்போன் போன்ற எலக்ட்ரானிக் பொருட்கள் கொண்டு செல்ல அனுமதிக்கப்படவில்லை. 

தேர்விற்காக 121 முதன்மைக் கண்காணிப்பாளர்களும், 127 துறை அலுவலர்களும், 179 நிலையான பறக்கும் படை உறுப்பினர்களும், 119 எழுத்தர் மற்றும் 119 அலுவலக உதவியாளர்கள் தேர்வு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர்.

கலெக்டர் ஆய்வு

திருவண்ணாமலை நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற பொதுத் தேர்வினை கலெக்டர் முருகேஷ் நேரில் வந்து பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

பின்னர் அவர் கூறுகையில், பொதுத்தேர்வுகள் நடைபெற உள்ள தேர்வு மையங்களில் மாணவர்கள் தேர்வு எழுத போதுமான அளவு இருக்கை வசதியும், தேவையான அளவு குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன.

 தேர்வு மையங்களுக்கு மாணவர்களுக்கும், தேர்வுப் பணி மேற்கொள்ளும் அலுவலர்களுக்கும் உரிய நேரத்தில் வருகை புரியும் வகையில் போக்குவரத்து துறையின் சார்பாக போக்குவரத்து வசதிகள் ஏற்படுத்தி தர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. 

தேர்வுக்காலங்களில் தடையற்ற மின்சாரம் வழங்க மின்சாரத் துறையின் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. 

மேலும் வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்கள் மற்றும் தேர்வு மையங்களில் உரிய போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது என்றார். 

ஆய்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேசமூர்த்தி மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர். 

இந்த நிலையில் முதல் நாளான இன்று தனித்தேர்வர்கள் உள்பட 29 ஆயிரத்து 531 மாணவர்கள் தேர்வு எழுத விண்ணப்பித்து இருந்தனர். இதில் 28 ஆயிரத்து 369 மாணவர்கள் தேர்வு எழுதினர். 1162 மாணவர்கள் தேர்வு எழுத வரவில்லை.

10-ம் வகுப்பு தேர்வு

நாளை (வெள்ளிக்கிழமை) 10-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தொடங்குகிறது. இந்த தேர்வு வருகிற 30-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் 33 ஆயிரத்து 393 மாணவர்கள் தேர்வு எழுத உள்ளனர். 

பிளஸ்-1 மாணவர்களுக்கான தேர்வு வருகிற 10-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) தொடங்கி 31-ந் தேதி நிறைவடைகிறது. இதில் 30 ஆயிரத்து 980 மாணவர்கள் தேர்வு எழுத உள்ளனர்.

Next Story