நாமக்கல் அருகே அங்கன்வாடி மையத்திற்கு பூட்டு குழந்தைகள், அதிகாரிகள் தவிப்பு


நாமக்கல் அருகே அங்கன்வாடி மையத்திற்கு பூட்டு குழந்தைகள், அதிகாரிகள் தவிப்பு
x
தினத்தந்தி 5 May 2022 10:55 PM IST (Updated: 5 May 2022 10:55 PM IST)
t-max-icont-min-icon

நாமக்கல் அருகே அங்கன்வாடி மையத்திற்கு பூட்டு குழந்தைகள், அதிகாரிகள் தவிப்பு

நாமக்கல்:
நாமக்கல் அருகே அங்கன்வாடி மையத்திற்கு பூட்டு போடப்பட்டதால், அதன் உள்ளே இருந்த குழந்தைகள் மற்றும் அதிகாரிகள் தவித்தனர்.
அங்கன்வாடி மையம்
நாமக்கல் அருகே உள்ள லக்கம்பாளையம் பகுதியில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தில் 20 குழந்தைகள் படித்து வருகின்றனர். இவர்கள் தினமும் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை படித்து விட்டு, உணவருந்தி செல்வார்கள். இங்கு அமைப்பாளராக சசிகலா பணியாற்றுகிறார். உதவியாளர் பணியிடம் சில ஆண்டுகளாக காலியாக உள்ளது.
இந்த நிலையில் நேற்று இந்த அங்கன்வாடி மையத்திற்கு வட்டார குழந்தைகள் வளர்ச்சி அலுவலர் வித்யாலட்சுமி மற்றும் மேற்பார்வையாளர் ஆகியோர் ஆய்வுக்கு வந்தனர். இவர்களையும் 10-க்கும் மேற்பட்ட குழந்தைகளையும் அங்கன்வாடி மையத்தில் வைத்து அமைப்பாளர் சசிகலா, பொதுமக்களின் உதவியுடன் பூட்டி விட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாவட்ட குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் பரிமளா தேவிக்கு தெரியப்படுத்தப்பட்டது. அவர் சக ஊழியர்களுடன் சம்பந்தப்பட்ட மையத்திற்கு வந்தார். இதனை தொடர்ந்து குழந்தைகளும், அலுவலர்களும் மீட்கப்பட்டனர்.
அனுப்ப மாட்டோம்
அப்போது அங்கு வந்த பொதுமக்கள் அதிகாரிகளிடம் இந்த அங்கன்வாடி மையத்தில் போதிய அடிப்படை வசதிகள் இல்லை. எனவே உடனடியாக அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும். இல்லையெனில் குழந்தைகளை அங்கன்வாடி மையத்திற்கு அனுப்ப மாட்டோம் என கூறினர்.
இதுகுறித்து அங்கன்வாடி அமைப்பாளர் சசிகலா கூறுகையில், கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக உதவியாளர் பணியிடம் காலியாக உள்ளது. இதுகுறித்து அதிகாரிகளுக்கு கடிதம் அளித்தும் நடவடிக்கை இல்லை. எனவே பெற்றோர் கூறியதன் அடிப்படையில் அதிகாரிகளை மையத்திற்குள் வைத்து பூட்டினோம் உடனடியாக உதவியாளர் பணியிடம் நிரப்பப்பட வேண்டும். சுற்றுப்புற வளாகத்தில் தூய்மை பணிகள் மேற்கொள்ள வேண்டும். அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என்றார்.
மையத்திற்கு பூட்டு
இதுகுறித்து மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் பரிமளாதேவி கூறும்போது, ஆய்வுக்கு சென்ற எங்களுடைய வட்டார அலுவலர், மேற்பார்வையாளர் மற்றும் குழந்தைகளை மையத்திற்குள் வைத்து அமைப்பாளர் சசிகலா பூட்டி உள்ளார். அங்கன்வாடி அமைப்பாளர் சசிகலா மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட கலெக்டருக்கு கடிதம் எழுத உள்ளேன் என்றார். இந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story