கள்ள தொடர்பை கண்டித்த பெண் வெட்டிக் கொலை
கண்டமனூர் அருகே கள்ள தொடர்பை கண்டித்த பெண்ணை வெட்டி கொலை செய்த கணவனை போலீசார் கைது செய்தனர்.
கடமலைக்குண்டு:
கூலித்தொழிலாளி
தேனி மாவட்டம், கண்டமனூர் அருகே உள்ள குப்பிநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் லட்சுமணன் (வயது 56). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி ராசாத்தி (50). இவர்களுக்கு ராமகிருஷ்ணன் (26) என்ற மகன் உள்ளார். இந்த நிலையில் லட்சுமணனுக்கும், அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் இடையே கடந்த சில ஆண்டுகளாக தொடர்பு இருந்து வந்தது. இதுகுறித்து ராசாத்தி அவரது கணவர் லட்சுமணனை பலமுறை கண்டித்தார். ஆனாலும் லட்சுமணன் அந்த பெண்ணிடம் தொடர்ந்து பழகி வந்தார். மேலும் குடும்பத்தையும் சரிவர கவனிக்காமல் இருந்தார்.
கழுத்தை இறுக்கி கொலை
இதனால் ஆத்திரமடைந்த ராசாத்தி கடந்த சில நாட்களுக்கு முன்பு லட்சுமணன் மற்றும் அந்த பெண் மீது ஆண்டிப்பட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதனால் லட்சுமணன் கோபமடைந்து ராசாத்தியிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்தார். இந்த நிலையில் நேற்று இரவு கணவன்-மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது லட்சுமணன் அரிவாள்மனையை எடுத்து ராசாத்தியின் தலையில் வெட்டினார். இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த ராசாத்தியை அவர் அணிந்திருந்த சேலையால் கழுத்தை இறுக்கி கொலை செய்தார். பின்னர் அங்கு இருந்து லட்சுமணன் தப்பியோடி விட்டார். இந்நிலையில் வெளியே சென்று விட்டு வீடு திரும்பிய ராமகிருஷ்ணன், தாய் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
கைது
இதுகுறித்து கண்டமனூர் போலீஸ் நிலையத்தில் அவர் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான லட்சுமணனை தேடி வந்தனர். இதற்கிடையே கண்டமனூர் அருகே டாணாதோட்டம் பகுதியில் பதுங்கியிருந்த லட்சுமணனை போலீசார் கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story