எக்ஸ்பிரஸ் ரெயில் வந்தபோது தண்டவாளத்தில் எரிந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிள்


எக்ஸ்பிரஸ் ரெயில் வந்தபோது தண்டவாளத்தில் எரிந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிள்
x
தினத்தந்தி 5 May 2022 11:04 PM IST (Updated: 5 May 2022 11:04 PM IST)
t-max-icont-min-icon

ராமேசுவரம் அருகே அதிகாலையில் எக்ஸ்பிரஸ் ரெயில் வந்த போது தண்டவாளத்தில் மோட்டார் சைக்கிள் எரிந்துகொண்டு இருந்தது. ரெயிலை உடனடியாக நிறுத்தியதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இதற்கு நாசவேலை காரணமா? என விசாரணை நடந்து வருகிறது.

ராமேசுவரம், 
ராமேசுவரம் அருகே அதிகாலையில் எக்ஸ்பிரஸ் ரெயில் வந்த போது தண்டவாளத்தில் மோட்டார் சைக்கிள் எரிந்துகொண்டு இருந்தது. ரெயிலை உடனடியாக நிறுத்தியதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இதற்கு நாசவேலை காரணமா? என விசாரணை நடந்து வருகிறது.
எக்ஸ்பிரஸ் ரெயில்
தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத் பகுதியில் இருந்து ராமேசுவரத்திற்கு வாரம் ஒரு முறை எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. 
இந்த ரெயில் நேற்று முன்தினம் செகந்திராபாத்தில் இருந்து புறப்பட்டு, நேற்று அதிகாலை 3 மணி அளவில் ராமேசுவரம்-தங்கச்சிமடத்திற்கு இடைப்பட்ட பகுதியில் வேகமாக வந்து கொண்டிருந்தது.
தண்டவாளத்தில் தீ
 அப்போது, ரெயில்வே தண்டவாள பாதையில் தீ எரிந்து கொண்டு இருந்ததை பார்த்த ரெயில் என்ஜின் டிரைவர் தர்மராஜ், சாமர்த்தியமாக ரெயிலை தூரத்திலேயே நிறுத்திவிட்டு இறங்கி பார்த்துள்ளார். 
அப்போது தண்டவாள பாதையில் மோட்டார்சைக்கிள்  எரிந்து கொண்டிருந்தது தெரிந்தது. இதையடுத்து என்ஜின் டிரைவரும், ரெயில்வே கார்டும் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். பின்னர் அவர்கள் 2 பேரும் மண்ணை அள்ளிப்போட்டு தீயை அணைத்து, மோட்டார் சைக்கிளை அப்புறப்படுத்தினர். 
தொடர்ந்து ரெயில்வே தண்டவாளத்தில் ஏதேனும் பாதிப்பு உள்ளதா என பார்வையிட்டு, பாதிப்பு எதுவும் இல்லை என்று உறுதிசெய்தபின்  ரெயிலை இயக்கி ராமேசுவரம் ரெயில் நிலையத்தை அடைந்தனர். இதனால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டதுடன், சுமார் 40 நிமிடம் தாமதமாக செகந்திராபாத் ரெயில் ராமேசுவரம் நிலையத்தை அடைந்தது. 
விசாரணை
பின்னர் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கருகிக்கிடந்த மோட்டார் சைக்கிளை கைப்பற்றினர். அது யாருடையது என்பது குறித்து அதில் இருந்த பதிவு எண்ணை வைத்து  விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அந்த இரு சக்கர வாகனம் ராமேசுவரம் மெய்யம்புளி பகுதியில் வசித்து வரும் ராஜசேகர் (வயது 40) என்பவருக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது.  அவரிடம் ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் கடந்த 4-ந் தேதி இரவு வேலை முடித்துவிட்டு மெய்யம் புளி பகுதியில் உள்ள தனது வீட்டிற்கு சென்றபோது, பஸ் நிறுத்தம் அருகே 2 பேர் தன்னிடம் வாக்குவாதம் செய்ததாகவும் சிறிது நேரத்தில் வீட்டிற்கு சென்று மோட்டார் சைக்கிளை வெளியே நிறுத்தி விட்டு தூங்கி விட்டதாகவும், மறுநாள் காலையில் பார்த்தபோது மோட்டார்சைக்கிளை காணவில்லை என்றும் தெரிவித்துள்ளார். 
இதுதொடர்பாகவும், தண்டவாளத்தில் மோட்டார் சைக்கிள் எரிப்பில் தொடர்புடைய நபர்கள் பற்றியும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு்ள்ளனர்.
தடுப்பு கம்பி
இந்த சம்பவம் நடந்த ஒண்டிவீரன் நகர் பகுதியில் இருந்து ெரயில்வே தண்டவாள பாதைக்கு வாகனங்கள் செல்லாமல் இருக்கும் வகையில் உடனடியாக ரெயில்வே பணியாளர்கள் தடுப்பு கம்பிகளை அமைத்து  மூடினர்.
மேலும் இந்த சம்பவம் நாச வேலைக்கான சதியா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்தும் விசாரணை நடக்கிறது. அதிகாலையில் நடந்த இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்ைப ஏற்படுத்தியது.

Next Story