இன்ஸ்பெக்டர் உள்பட 4 பேர் இடமாற்றம்


இன்ஸ்பெக்டர் உள்பட 4 பேர் இடமாற்றம்
x
தினத்தந்தி 5 May 2022 11:52 PM IST (Updated: 5 May 2022 11:52 PM IST)
t-max-icont-min-icon

தேனியில் கஞ்சா விற்பனைக்கு உடந்தை என வந்த புகாரை தொடர்ந்து அல்லிநகரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் உள்பட 4 பேரை அதிரடியாக இடமாற்றம் செய்து போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார்.

தேனி: 


கஞ்சா விற்பனை
தமிழகம் முழுவதும் டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவின்பேரில் கஞ்சா விற்பனையை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதுபோல், தேனி மாவட்டத்திலும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டு கஞ்சா விற்பனையை தடுக்க தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கஞ்சா வியாபாரிகள் கைது செய்யப்படுவதோடு, அவர்களின் சொத்துகளை முடக்கவும் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அந்த வகையில் சில கஞ்சா வியாபாரிகளின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டன.

கஞ்சா வியாபாரிகளுக்கு போலீசார் உடந்தையாக இருந்தால் அவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் சூப்பிரண்டு எச்சரித்து இருந்தார். இந்நிலையில், அல்லிநகரம் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் கஞ்சா விற்பனைக்கு போலீசாரே உடந்தையாக செயல்படுவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுவுக்கு புகார்கள் வந்தன.

4 பேர் இடமாற்றம்
இந்த புகார்கள் மீது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே நேரடி விசாரணை நடத்தினார். இந்த விசாரணை எதிரொலியாக, அல்லிநகரம் போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் இன்ஸ்பெக்டர் ராஜேஷ்கண்ணன் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறைக்கும், போலீஸ்காரர்கள் ராஜா, ஸ்ரீதர், வாலிராஜன் ஆகிய 3 பேரை ஆயுதப்படை பிரிவுக்கும் மாற்றம் செய்து போலீஸ் சூப்பிரண்டு அதிரடி உத்தரவிட்டார். அதன்படி இன்ஸ்பெக்டர் உள்பட 4 பேரும் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டனர்.

இந்த புகார்களின் உண்மைத்தன்மை குறித்து முழுமையாக விசாரித்து துறைவாரியான மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீஸ் தரப்பில் கூறப்பட்டது. இந்த சம்பவம் போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story