கோவில் முன்னேற்ற சங்க அலுவலகத்திற்கு ‘சீல்’: வெள்ளிமலையில் பக்தர்கள் போராட்டம்
வெள்ளிமலையில் கோவில் முன்னேற்ற சங்க அலுவலகத்திற்கு ‘சீல்’ வைத்ததை எதிர்த்து பக்தர்கள் போராட்டம் நடத்தினர். இதில் போலீசாருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டதையடுத்து 173 பேர் கைது செய்யப்பட்டனர்.
மணவாளக்குறிச்சி,
வெள்ளிமலையில் கோவில் முன்னேற்ற சங்க அலுவலகத்திற்கு ‘சீல்’ வைத்ததை எதிர்த்து பக்தர்கள் போராட்டம் நடத்தினர். இதில் போலீசாருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டதையடுத்து 173 பேர் கைது செய்யப்பட்டனர்.
கோவில் முன்னேற்ற சங்கம்
மணவாளக்குறிச்சி அருகே உள்ள வெள்ளிமலையில் பாலசுப்பிரமணியசாமி கோவில் பல ஆண்டுகளாக கவனிப்பாரற்று கிடந்தது. இதையடுத்து கோவிலை புனரமைத்து கும்பாபிஷேகம் மற்றும் விழாக்களை நடத்த சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்பு கோவில் முன்னேற்ற சங்கம் உருவாக்கப்பட்டது. தொடர்ந்து கோவிலை பராமரித்து கும்பாபிஷேகம் செய்யப்பட்டு பல்வேறு விழாக்கள் பக்தர்கள் பங்களிப்புடன் நடத்தப்பட்டது.
இதையடுத்து அங்கு பராமரிப்பின்றி இருந்த ஒரு பழைய கட்டிடத்தில் கோவில் முன்னேற்ற சங்கம் செயல்பட கோவில் நிர்வாகம் அனுமதி வழங்கியது. அந்த கட்டிடம் மிகவும் மோசமான நிலையில் இருந்ததால் அதனை இடித்து தள்ளிவிட்டு சங்க அலுவலகம் கட்டுவதற்கு அப்போது இணை ஆணையராக இருந்த தனபால் அனுமதி வழங்கினார். அத்துடன் அவர் கட்டிடத்தை திறந்து வைத்து சங்க செயல்பாட்டை அங்கீகரித்தார். அந்த கட்டிடத்தில் இருந்து கோவில் முன்னேற்றம் சங்கம் தொடர்ந்து கோவில் திருப்பணிகளை செய்து வந்தது.
‘சீல்’ வைப்பு
தற்போது கடந்த சில மாதங்களாக கோவிலில் இருந்து சங்கத்தை அப்புறப்படுத்த கோவில் நிர்வாகம் முயற்சிகளை எடுத்து வருவதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்று அதிகாலையில் சங்க உறுப்பினர்கள் கோவிலுக்குள் வருவதற்கு முன்பாக சங்க அலுவலகத்தை குமரிமாவட்ட இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் ஞானசேகர், உதவி ஆணையர் கண்ணதாசன், ஆய்வாளர் செல்வி, கண்காணிப்பாளர் செந்தில்குமார், கோவில் ஸ்ரீகாரியம் சிவபாஸ்கர், என்ஜினீயர் அய்யப்பன், குளச்சல் வருவாய் ஆய்வாளர் முத்துபாண்டி, வெள்ளிமலை கிராம நிர்வாக அலுவலர் தமயந்தி, குளச்சல் துணை போலீஸ் சூப்பிரண்டு தங்கராமன், மணவாளக்குறிச்சி இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் ‘சீல்’ வைத்தனர்.
ஆர்ப்பாட்டம்
இதுபற்றி தகவல் அறிந்த பா.ஜனதா நிர்வாகிகள், அனைத்து இந்து இயக்க பிரதிநிதிகள், பக்தர்கள் நேற்று காலை 9 மணியளவில் அந்த பகுதியில் திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் மாவட்ட பா.ஜனதா தலைவர் தர்மராஜ், இந்து முன்னணி கோட்ட அமைப்பாளர் மிசா சோமன், ஆர்.எஸ்.எஸ். மாவட்ட தலைவர் ராஜேந்திரன், மாநில பா.ஜனதா செயலாளர் உமாரதி, முன்னாள் மாவட்ட தலைவர்கள் பொன் ரத்தினமணி, முத்துகிருஷ்ணன், துணைத் தலைவர் ரமேஷ், கோட்ட அமைப்பாளர் கிருஷ் ணன், கோட்ட அமைப்பு செயலாளர் கிருஷ்ணகுமார், பஞ்சாயத்து தலைவர்கள் பாலசுப்ரமணியன், ராணிஜெயந்தி, சங்க கவுரவத் தலைவர் சிவசெல்வராஜன், தலைவர் சிவகுமார், செயலாளர் பத்மதாஸ் மற்றும் சங்க நிர்வாகிகள் உள்பட பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.
அவர்களுடன் குளச்சல் போலீஸ்துணை சூப்பிரண்டு தங்கராமன் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில் உடன்பாடு ஏற்படவில்லை. இதை அடுத்து கல்குளம் தாசில்தார் வினோத் பேச்சுவார்த்தை நடத்தினார். அதிலும் உடன்பாடு ஏற்படவில்லை.
உண்ணாவிரதம்
இதையடுத்து சங்க அலுவலகத்தை ‘சீல்’ வைத்ததை கண்டித்து பா.ஜ.க. மாவட்ட தலைவர் தர்மராஜ் உண்ணாவிரத போராட்டம் நடத்த போவதாக அறிவித்து உண்ணாவிரதம் இருந்தார். இதற்கிடையே அங்கிருந்து உதவி ஆணையர் காரில் புறப்பட தயாரானார். உடனே பக்தர்கள், பிரச்சினைக்கு தீர்வு கண்டபின் இங்கிருந்து சென்றால் போதும் என்று கூறி அவரது கரை சிறைபிடித்தனர்.
மாலை 6 மணி ஆகியும் சுமூக முடிவு எட்டப்படாததால் ஆத்திரமடைந்த பக்தர்கள் கோவில் அலுவலகத்தை முற்றுகையிட சென்றனர். அப்போது அலுவலகத்திற்குள் இருந்த அதிகாரிகள் கதவை மூடினர். உடனே ஆத்திரமடைந்த பக்தர்கள் அலுவலக கதவை வெளியே பூட்டினர். அதை பார்த்துக் கொண்டிருந்த போலீசார் அதிகாரிகளை வெளியே கொண்டு வர அங்கு கூடி நின்றவர்களை அப்புறப்படுத்த முயன்றனர்.
தள்ளுமுள்ளு
இதில் பக்தர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் திருவிதாங்கோடு பேரூராட்சி கவுன்சிலர் மாளிகாவை பெண் போலீசார் பிடித்து அப்புறப்படுத்தியபோது மயங்கி கீழே விழுந்தார். உடனடியாக அங்கு நின்றவர்கள் அவரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட பா.ஜனதா மாவட்ட தலைவர் தர்மராஜ் மற்றும் 21 பெண்கள் உள்பட 173 பேரை கைது செய்து வெள்ளிச்சந்தை அருகே உள்ள ஈத்தங்காடு மண்டபத்தில் கொண்டு சென்று தங்க வைத்தனர். பின்னர் இரவு 9 மணியளவில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.
இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story