தேவகோட்டை அருகே வடமாடு மஞ்சுவிரட்டு


தேவகோட்டை அருகே வடமாடு மஞ்சுவிரட்டு
x
தினத்தந்தி 5 May 2022 7:09 PM GMT (Updated: 5 May 2022 7:09 PM GMT)

தேவகோட்டை அருகே கோவில் மதுஎடுப்பு விழாவையொட்டி வடமாடு மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.

தேவகோட்டை,
தேவகோட்டை அருகே கோவில் மதுஎடுப்பு விழாவை யொட்டி வடமாடு மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.
மஞ்சுவிரட்டு
தேவகோட்டை அருகே உள்ள சிறுமருதூர் தாணிச்சாவூரணி கிராமத்தில் உள்ள நாட்டாளம்மன் கோவில் மது எடுப்பு விழா கடந்த மாதம் 26-ந்தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. தொடர்ந்து கடந்த 29-ந் தேதி மாலை திருவிளக்கு பூஜை நிகழ்ச்சியும், கடந்த 2-ந்தேதி பால்குடம் எடுத்தல் மற்றும் பூத்தட்டு எடுத்தல் நிகழ்ச்சியும், 3-ந்தேதி பொங்கல் வைக்கும் நிகழ்ச்சியும், மறுநாள் 4-ந்தேதி மாலை மாட்டு வண்டி பந்தயம் நிகழ்ச்சி நடைபெற்றது. 
இதையொட்டி நேற்று காலை வடமாடு மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி கண்டதேவியில் நடைபெற்றது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக இந்த வடமாடு மஞ்சுவிரட்டு நடைபெறாமல் இருந்த நிலையில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியை காண்பதற்காக தேவகோட்டை மற்றும் அதன் சுற்று வட்டார கிராம மக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு போட்டியை பார்த்து ரசித்தனர். 
போட்டியில் சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து மொத்தம் 10 காளைகள் கொண்டு வரப்பட்டு களத்தில் விளையாட இறங்கிவிடப்பட்டது. 
தொடர்ந்து இந்த காளைகளை அடக்க 9 பேர் கொண்ட மாடுபிடி வீரர்கள் களத்தில் காளையை அடக்க 20 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டது. முன்னதாக ஒவ்வொரு காளைக்கும் சிறப்பு மரியாதை செய்யப்பட்டது.
ரொக்க பரிசு
தொடர்ந்து களத்தில் இறங்கி விடப்பட்டு சீறிபாய்ந்த காளையை அங்கிருந்த வீரர்கள் அடக்க முயன்றனர். 
இதில் சில காளைகள் வீரர்களிடம் பிடிபட்டது. சில காளைகள் வீரர்களிடம் பிடிபடாமல் வெற்றி பெற்றது. வெற்றி பெற்ற காளைகளுக்கு ரூ.5ஆயிரமும், மாடுபிடி வீரர்களுக்கு ரூ.2ஆயிரம் ரொக்க பரிசை தொழில் அதிபர் ராஜ்குமார் வழங்கினார். நிகழ்ச்சியையொட்டி தேவகோட்டை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். 
போட்டியில் காயமடைந்த வீரர்களுக்கு அங்கிருந்த மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர்.

Next Story