பிளஸ்-2 தேர்வு தொடங்கியது


பிளஸ்-2 தேர்வு தொடங்கியது
x
தினத்தந்தி 6 May 2022 2:02 AM IST (Updated: 6 May 2022 2:02 AM IST)
t-max-icont-min-icon

பிளஸ்-2 தேர்வு தொடங்கியது

தஞ்சாவூர்
 பிளஸ்-2 தேர்வு நேற்று தொடங்கியது. இந்த தேர்வு வருகிற 28-ந் தேதி வரை நடைபெறுகிறது. தஞ்சை மாவட்டத்தில் இந்த ஆண்டு பிளஸ்-2 பொதுத்தேர்வினை 28 ஆயிரத்து 430 மாணவ, மாணவிகள் எழுத விண்ணப்பித்து இருந்தனர். 225 பள்ளிகளை சேர்ந்த இந்த மாணவ, மாணவிகள் 107 மையங்களில் எழுதுகிறார்கள்.
இதில் மாணவர்கள் 13 ஆயிரத்து 235 பேரும், மாணவிகள் 15 ஆயிரத்து 195 பேரும் அடங்குவர். மேலும் 604 தனித் தேர்வர்களும் தேர்வு எழுதுகிறார்கள். இவர்களுக்கான 3 தனித்தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் மாற்றுத்திறனாளி மாணவர்கள் 162 பேரும் அடங்குவர். மொத்தம் 110 மையங்களில் 29 ஆயிரத்து 34 மாணவ, மாணவிகள் தேர்வு எழுத விண்ணப்பித்ததில், 1,128 பேர் தேர்வு எழுத வரவில்லை. 27 ஆயிரத்து 906 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினர்.
206 பறக்கும் படைகள்
தேர்வு நடைபெறுவதையொட்டி காலை 9 மணி முதலே தேர்வு எழுதும் மையங்களுக்கு மாணவ, மாணவிகள் வரத்தொடங்கினர். உடல் ஊனமுற்றோர், கண்பார்வையற்றோர், காதுகேளாத வாய் பேச இயலாதோர், மன வளர்ச்சி குன்றியவர்களுக்கு கூடுதலாக 1 மணி நேரம் தேர்வு எழுத நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருந்தது. மேலும் சொல்வதை எழுதுவதற்கு ஆசிரியர்களும் நியமனம் செய்யப்பட்டு, மாணவர்கள் சொல்வதை ஆசிரியர்கள் எழுதினர்.
தஞ்சை மாவட்டத்தில் தேர்வுகள் நடைபெறுவதை கண்காணிக்க தமிழக அரசால் அரசு பொதுத்தேர்வுகள் இணை இயக்குனர் (இடைநிலை) செல்வக்குமார் கண்காணிப்பு அலுவலராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார். அவர் தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு தேர்வு மையங்களுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். தஞ்சையில் உள்ள அரசர் மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்திற்கும் அவர் சென்று ஆய்வு செய்தார். அப்போது மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரி சிவகுமார் உடன் இருந்தார்.
போலீஸ் பாதுகாப்பு
தேர்வில் முறைகேடுகள் நடைபெறுவதை தடுக்கும் வகையில் 206 பறக்கும் படைகளும் அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். தேர்வு பணிகளில் 2 ஆயிரத்து 533 பணியாளர்களும் ஈடுபடுத்தப்பட்டனர். தேர்வு மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது.

Next Story