மதுரையில் ‘சவர்மா’ விற்பனை செய்யும் 108 கடைகளில் அதிரடி சோதனை
மதுரையில் சவர்மா விற்பனை செய்யும் 108 கடைகளில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். விதிமீறிய கடைகளுக்கு நோட்டீசு வழங்கப்பட்டது.
மதுரை,
மதுரையில் சவர்மா விற்பனை செய்யும் 108 கடைகளில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். விதிமீறிய கடைகளுக்கு நோட்டீசு வழங்கப்பட்டது.
கேரளாவில் மாணவி பலி
கேரளாவில் சில தினங்களுக்கு முன்பு ஒரு கடையில் சவர்மா சாப்பிட்ட பிளஸ்-1 மாணவி, உடல்நலம் பாதிக்கப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் அந்த கடையில் சவர்மா சாப்பிட்ட பலருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து தமிழகத்திலும் சவர்மா கடைகளில் ஆய்வு செய்ய தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி உணவு பாதுகாப்பு துறையின் மதுரை மாவட்ட நியமன அலுவலர் வே.ஜெயராமபாண்டியன் தலைமையில் அந்த துறையை சேர்ந்த 19 அலுவலர்கள் மதுரை நகரில் உள்ள சவர்மா விற்பனை கடைகளில் கடந்த 2 நாட்களாக சோதனை செய்து வருகின்றனர்.
108 கடைகளில் சோதனை
நேற்று முன்தினம் 52 கடைகளிலும், நேற்று 56 கடைகளிலும் அதிகாரிகள் சோதனை செய்தனர். இந்த சோதனையின் முடிவில் தரமற்ற சவர்மா விற்பனை செய்த 7 கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. கெட்டுப்போன 12 கிலோ கோழி இறைச்சியும் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த சோதனையின் போது அதிகாரிகள் சவர்மா கடைகளுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கினார்கள். அதன்படி அனைத்து கடைகளும் லைசென்சு பெற வேண்டும். சுத்தமான இறைச்சியை பயன்படுத்த வேண்டும். கடையை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். பணியாளர்கள் உடல் தகுதி சான்றிதழ் பெற வேண்டும். இறைச்சியை நன்றாக வேக வைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு அறிவுரைகள் வழங்கினர்.
Related Tags :
Next Story