தேவி கருமாரியம்மன் கோவில் குண்டம் விழா- திரளான பக்தர்கள் தீ மிதித்தார்கள்


தேவி கருமாரியம்மன் கோவில் குண்டம் விழா- திரளான பக்தர்கள் தீ மிதித்தார்கள்
x
தினத்தந்தி 6 May 2022 3:08 AM IST (Updated: 6 May 2022 3:08 AM IST)
t-max-icont-min-icon

அந்தியூர் அருகே தேவி கருமாரியம்மன் கோவில் குண்டம் விழாவில் திரளான பக்தர்கள் தீ மிதித்தார்கள்.

அந்தியூர்
அந்தியூர் அருகே தேவி கருமாரியம்மன் கோவில் குண்டம் விழாவில் திரளான பக்தர்கள் தீ மிதித்தார்கள். 
தேவி கருமாரியம்மன்
அந்தியூர் அருகே உள்ள மொடக்குறிச்சி அன்னூரில் பிரசித்தி பெற்ற தேவி கருமாரி அம்மன் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் சித்திரை மாதம் குண்டம் விழா நடைபெறும். 
இந்த ஆண்டு விழாவுக்காக கடந்த 15 நாட்களுக்கு முன்பு பூச்சாட்டப்பட்டது. அதைத்தொடர்ந்து கொடி ஏற்றுதல், கம்பம் நடுதல், காப்புக்கட்டுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
மாவிளக்கு
இதைத்தொடர்ந்து நாள்தோறும் சிறப்பு அலங்காரத்தில் தேவி கருமாரி அம்மன் உற்சவ சிலை திருவீதி உலா நடைபெற்றது. பெண்கள் கம்பத்துக்கு புனிதநீர் ஊற்றி வந்தார்கள். இரவில் கம்பம் ஆட்டம் நடைபெற்றது. 
இதையடுத்து முக்கிய விழாவான குண்டம் விழா நேற்று காலை நடைபெற்றது. முன்னதாக பெண்கள் கோவிலுக்கு புனிதநீர் கொண்டு வந்தார்கள். பின்னர் பொங்கல் வைத்து, மாவிளக்கு படைத்தார்கள். அதன்பின்னர் குண்டம் அமைக்கப்பட்டது. 
தீ மிதித்தார்கள்...
இதையடுத்து விரதம் இருந்த ஆண்கள், பெண்கள், சிறுவர், சிறுமிகள் ஏராளமானோர் பூ சுற்றிய பிரம்பை கையில் வைத்துக்கொண்டு தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினார்கள். 
மாலை 4 மணி அளவில் கம்பம் பிடுங்கப்பட்டு ஊர் பொது கிணற்றில் விடப்பட்டது. இன்று (வெள்ளிக்கிழமை) மஞ்சள் நீராட்டு விழா நடைபெறுகிறது. 
விழாவையொட்டி அந்தியூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தார்கள். 

Next Story