மொடக்குறிச்சி அருகே ரெயில்வேயில் வேைல வாங்கித்தருவதாக ரூ.9 லட்சம்- நகை மோசடி- பாதிக்கப்பட்டவர்கள் தர்ணா போராட்டம்
மொடக்குறிச்சி அருகே ரெயில்வேயில் வேலை வாங்கித்தருவதாக ரூ.9 லட்சம் மற்றும் நகை மோசடி செய்தவரின் வீட்டு வாசலில் பாதிக்கப்பட்டவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.
மொடக்குறிச்சி
மொடக்குறிச்சி அருகே ரெயில்வேயில் வேலை வாங்கித்தருவதாக ரூ.9 லட்சம் மற்றும் நகை மோசடி செய்தவரின் வீட்டு வாசலில் பாதிக்கப்பட்டவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.
வீட்டு வாசலில் தர்ணா
மொடக்குறிச்சி சின்னியம்பாளையத்தை சேர்ந்தவர் சின்னத்தம்பி. இவர் சிலருடன் மொடக்குறிச்சியை அடுத்த அய்யக்கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்த ஒருவருடைய வீட்டு வாசலுக்கு சென்று நேற்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
இதுபற்றி அறிந்ததும் மொடக்குறிச்சி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று தர்ணாவில் ஈடுபட்டு இருந்தவர்களிடம் விசாரித்தார்கள். அப்போது சின்னத்தம்பி போலீசாரிடம், நான் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பர்னிச்சர் கடை வைத்து நடத்தி வந்தேன். அப்போது இந்த வீட்டை சேர்ந்தவர் என்னிடம் வந்து ரெயில்வே நிர்வாகத்திற்கு மின்விசிறிகள் தேவைப்படுவதாக கூறி அடிக்கடி என்னிடம் மின்விசிறிகள் மொத்தமாக வாங்கிச் செல்வார். அதனால் அவரை நம்பினேன். அப்போது ரெயில்வேயில் வேலை வாங்கி தருகிறேன். ரூ.10 லட்சம் தாருங்கள் என்றார். இதை நான் நம்பி 3 தவணைகளாக ரூ.4 லட்சம் பணம் மற்றும் 4½ பவுன் நகை கொடுத்தேன்.
வரச்சொல்லி தாக்கினர்
ஆனால் எனக்கு வேைல வாங்கித்தரவில்லை. கடந்த 6 மாதமாக அவரை தொடர்பே கொள்ள முடியவில்லை. இந்தநிலையில் கடந்த 3 மாதத்துக்கு முன் என்னை வீட்டுக்கு வரச்சொன்னார். நான் சென்றபோது அவர் தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து என்னை தாக்கி, காலை உடைத்துவிட்டார். இதேபோல் என்னைப் போலவே சிலர் ஏமாந்துள்ளனர்.
இந்த மோசடியில் மேலும் சிலருக்கும் தொடர்பு உண்டு. ரெயில்வேயில் வேலை வாங்கி தருவதாக மொத்தம் ரூ.9 லட்சம் மற்றும் 4½ பவுன் நகை ஆகியவற்றை மோசடி செய்துவிட்டார்கள். இதுகுறித்து ஏற்கனவே மொடக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளோம். இந்தநிலையில் எங்களுடைய பணத்தை கேட்டு தற்போது வீட்டுக்கு வந்தோம். அவருடைய மனைவி மற்றும் தாயார் தகாத வார்த்தையால் பேசுகிறார்கள். எனவே இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
இதையடுத்து போலீசார் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கிறோம் என்று உறுதி அளித்ததை தொடர்ந்து தர்ணாவில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து சென்றார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story