சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேடு வழக்கில் டி.எஸ்.பி., இன்ஸ்பெக்டர் அதிரடி கைது
சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேடு வழக்கில் டி.எஸ்.பி.(துணை போலீஸ் சூப்பிரண்டு), போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆகியோரை சி.ஐ.டி. போலீசார் அதிரடியாக கைது செய்தனர். மேலும் இந்த விவகாரத்தில் தலைமறைவாக உள்ள 9 பேரை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளது.
பெங்களூரு: சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேடு வழக்கில் டி.எஸ்.பி.(துணை போலீஸ் சூப்பிரண்டு), போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆகியோரை சி.ஐ.டி. போலீசார் அதிரடியாக கைது செய்தனர். மேலும் இந்த விவகாரத்தில் தலைமறைவாக உள்ள 9 பேரை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளது.
சி.ஐ.டி. போலீஸ் விசாரணை
கர்நாடகத்தில் கடந்த ஆண்டு(2021) அக்டோபர் மாதம் 545 சப்-இன்ஸ்பெக்டர் பணிகளுக்கான எழுத்து தேர்வு நடைபெற்றது.இந்த தேர்வுக்கான முடிவுகள் கடந்த பிப்ரவரி மாதம் வெளியானது. தேர்வு முடிவுகள் வெளியான பின்பு சப்-இன்ஸ்பெக்டர் தேர்வில் முறைகேடு நடந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்ததால், அதுகுறித்து விசாரிக்க சி.ஐ.டி. போலீசாருக்கு முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை உத்தரவிட்டார்.
அதன்பேரில், விசாரணை நடத்தி வரும் சி.ஐ.டி. போலீசார் பா.ஜனதா பெண் பிரமுகர், காங்கிரஸ் பிரமுகர்கள், போலீஸ்காரர்கள் உள்பட 40-க்கும் மேற்பட்டோரை கைது செய்துள்ளனர். சப்-இன்ஸ்பெக்டர் தேர்வில் தேர்ச்சி பெற்ற 545 பேரிடமும் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டு நோட்டீசு அனுப்பி வைக்கப்பட்டது. அவர்களிடமும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் தினமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
தடயவியல் ஆய்வுக்கு அனுப்பி...
கலபுரகியில் உள்ள பா.ஜனதா பெண் பிரமுகருக்கு சொந்தமான பள்ளியில் அமைக்கப்பட்ட தேர்வு மையத்தில் தான் முறைகேடு நடந்திருப்பதாக கூறப்பட்டது. ஆனால் பெங்களூரு உள்பட 7 தேர்வு மையங்களில் நடந்த சப்-இன்ஸ்பெக்டர் தேர்வில் முறைகேடு நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, தேர்வில் தேர்ச்சி பெற்ற 545 பேரின் தேர்வுத்தாள்களையும் தடயவியல் ஆய்வுக்காக சி.ஐ.டி. போலீசார் அனுப்பி வைத்திருக்கிறார்கள்.
பெங்களூருவில் உள்ள ஒரு தேர்வு மையத்தில் முறைகேடு நடந்திருப்பது தெரியவந்துள்ளதால், அதுகுறித்து ஐகிரவுண்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். அதில், 22 பேரின் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளது. அவர்களில் 13 பேரை இதுவரை ஐகிரவுண்டு போலீசார் கைது செய்து, சி.ஐ.டி. போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
4 தனிப்படைகள் அமைப்பு
அதே நேரத்தில் 9 பேர் தலைமறைவாக இருந்து வருகிறார்கள். அவர்களில் ரஜனா என்ற பெண் உள்பட சிலர் அடங்குவர். அவர்களை கைது செய்ய ஐகிரவுண்டு மற்றும் சி.ஐ.டி. போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். அவர்களை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு இருப்பதாக உயர் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையில், சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேட்டில் கைதான ருத்ரேகவுடாவிடம் விசாரித்ததில், போலீஸ் அதிகாரிகள் சிலருக்கும் தொடர்பு இருப்பது பற்றி தெரிவித்தார்.
இதையடுத்து, ராய்ச்சூர் மாவட்டம் லிங்கசுகூர் துணை போலீஸ் சூப்பிரண்டு மல்லிகார்ஜுன், கலபுரகி மாவட்டத்தில் கைரேகை பிரிவில் இன்ஸ்பெக்டராக பணியாற்றும் ஆனந்த் ஆகியோரிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்தார்கள். இவர்களில் மல்லிகார்ஜுன் முதலில் கலபுரகி மாவட்டம் ஆலந்தாவில் துணை போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி இருந்தார். சமீபத்தில் தான் அவர் ராய்ச்சூர் மாவட்ட லிங்கசுகூருக்கு பணி இடமாற்றம் செய்யப்பட்டு இருந்தார்.
2 போலீஸ் அதிகாரிகள் கைது
இதையடுத்து, 2 பேரையும் விசாரணைக்கு ஆஜராகும்படி நோட்டீசு அனுப்பி வைக்கப்பட்டு இருந்தது. அதன்படி, கலபுரகி சி.ஐ.டி. போலீஸ் அலுவலகத்தில் மல்லிகார்ஜுன், ஆனந்த் ஆகியோர் விசாரணைக்கு ஆஜரானார்கள். அவா்களிடம் தொடர்ந்து 5 மணிநேரம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேட்டில் மல்லிகார்ஜுன், ஆனந்திற்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து, நேற்று மதியம் துணை போலீஸ் சூப்பிரண்டு மல்லிகார்ஜுன், இன்ஸ்பெக்டர் ஆனந்த் ஆகியோர் கைது செய்யப்பட்டார்கள்.
அவர்களுக்கு அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. பின்னர் மல்லிகார்ஜுன், ஆனந்திடம் முறைகேடு தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள். அவர்கள் 2 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி காவலில் எடுத்து சி.ஐ.டி. போலீசார் விசாரித்து வருகிறார்கள். சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேட்டில் 2 போலீஸ் அதிகாரிகள் கைதாகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story