கொலையான முதியவரின் உறவினர்கள் சாலை மறியலுக்கு முயற்சி


கொலையான முதியவரின் உறவினர்கள் சாலை மறியலுக்கு முயற்சி
x
தினத்தந்தி 6 May 2022 3:31 AM IST (Updated: 6 May 2022 3:31 AM IST)
t-max-icont-min-icon

தென்காசியில் கொலை செய்யப்பட்ட முதியவரின் உடலை பிரேத பரிசோதனை செய்ய காலதாமதம் ஆனதால் ஆத்திரம் அடைந்த உறவினர்கள் சாலை மறியலுக்கு முயன்றனர்.

தென்காசி:
தென்காசி அருகே உள்ள இலஞ்சி காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் கோட்டை மாடன் (வயது 82). இவர் நேற்று முன்தினம் காலையில் தனது தோப்பிற்கு சென்று வருவதாக வீட்டில் கூறி சென்றார். பின்னர் அவரது மகள் சந்திரா தோப்பிற்கு சென்று பார்த்தபோது, அங்கு கோட்டை மாடன் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து குற்றாலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை    நடத்தி   வருகிறார்கள். இறந்த கோட்டை மாடனின் உடல் பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த நிலையில் தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் அவரது உடலை பார்த்துவிட்டு காயங்கள் பெரிய அளவில் இல்லாததால் தெளிவான பரிசோதனை நிபுணர்கள் குழுவை வைத்து பரிசோதனை நடத்துவதற்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்க முடிவு செய்தனர். நேற்று முன்தினம் காலையில் இறந்தவரின் உடலை நேற்றும் பரிசோதனை செய்யாததால் ஆத்திரம் அடைந்த உறவினர்கள் நேற்று மதியம் ஆஸ்பத்திரியில் திரண்டனர். பிரேத பரிசோதனை பாளையங்கோட்டையில் நடக்க இருப்பதை அறிந்த அவர்கள் தென்காசியில் பரிசோதனை செய்ய வேண்டும் என்று வற்புறுத்தி கூறினர். அப்போது டாக்டர்கள் விளக்கம் அளித்தனர். 

இதனை ஏற்றுக்கொள்ளாத அவரது உறவினர்கள் ஆஸ்பத்திரியின் எதிரே மெயின் ரோட்டில் மறியலில் ஈடுபட சென்றனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் தென்காசி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் போலீசார் அவர்களை சமரசம் செய்து ஆஸ்பத்திரிக்கு அழைத்துச்சென்று டாக்டர்களிடம் பேசினர். பின்னர் சிறப்பு டாக்டர்கள் குழு அமைக்கப்பட்டு கோட்டை மாடனின் உடல் பரிசோதனை செய்யப்பட்டது.

அதன்பிறகு உறவினர்கள் அவரது உடலை பெற்றுக் கொண்டு இலஞ்சி சென்று அடக்கம் செய்தனர். இதற்கிடையே, கோட்டை மாடனை யார் கொலை செய்தது? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். பிரேத பரிசோதனைக்கு தாமதம் ஆனதால் உறவினர்கள் சாலை மறியலுக்கு முயன்ற சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story