கிணற்றில் தவறி விழுந்த மாணவர் பலி


கிணற்றில் தவறி விழுந்த மாணவர் பலி
x
தினத்தந்தி 6 May 2022 4:57 AM IST (Updated: 6 May 2022 4:57 AM IST)
t-max-icont-min-icon

கிணற்றில் தவறி விழுந்த மாணவர் உயிரிழந்தார்.

சமயபுரம்:
திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிறுகனூர் அருகே உள்ள பி.கே.அகரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மகன் முபிஷேக் (வயது 16). இவர் பெரம்பலூர் மாவட்டம் பாடாலூரில் உள்ள ஒரு பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் பள்ளிக்கு சென்றுவிட்டு பின்னர் வீட்டுக்கு திரும்பிய அவர், மாலையில் குளிப்பதற்காக அப்பகுதியில் உள்ள கிணற்றுக்கு சென்றார். அங்கு படியில் நின்று குளித்தபோது தவறி கிணற்றில் விழுந்தார். இந்நிலையில் அவர் நீண்ட நேரமாக வீடு திரும்பாததால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அங்கு சென்று தேடினர். மேலும் இது குறித்து சமயபுரம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் நிலைய அலுவலர் முத்துக்குமார் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் அங்கு வந்து கிணற்றுக்குள் இறங்கி தேடினர். சுமார் 80 அடி ஆழம் தண்ணீர் இருந்ததால் மோட்டார் மூலம் தண்ணீரை வெளியேற்றும் முயற்சியில் ஈடுபட்டனர். இந்நிலையில் இரவில் இடி, மின்னலுடன் மழை பெய்ததால் மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டது. இதையடுத்து நேற்று காலை மீண்டும் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். நீண்ட நேர தேடுதலுக்கு பின்னர் முபிஷேக்கை தண்ணீருக்குள் இருந்து பிணமாக மீட்டனர். இதையடுத்து அவரது உடலை ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த சிறுகனூர் போலீசார், இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story