திருச்சி சிறப்பு முகாமில் மரத்தில் ஏறி கைதி திடீர் போராட்டம்
திருச்சி சிறப்பு முகாமில் மரத்தில் ஏறி கைதி திடீர் போராட்டம் நடத்தினார்.
கே.கே.நகர்:
திருச்சி மத்திய சிறை வளாகத்தில் அகதிகளுக்கான சிறப்பு முகாம் உள்ளது. இங்கு இலங்கை, வங்காளதேசம், நைஜீரியா, தெற்கு சூடான், ருவாண்டா, சீனா உள்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த 150 பேர் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மீது போலி பாஸ்போர்ட்டில் இந்தியா வருதல், போதைப்பொருள் கடத்தல் உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளன. சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டு உள்ளவர்கள் தங்கள் மீதான வழக்குகளை விரைந்து முடித்து விடுதலை செய்யக்கோரி அவ்வப்போது போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்தநிலையில் இலங்கையை சேர்ந்த கெட்டியான்பாண்டியன் (வயது 40) என்ற கைதியை பார்க்க அவரது மனைவி ரூபா நேற்று மதியம் சிறப்பு முகாமிற்கு வந்திருந்தார். அவரிடம், கெட்டியான்பாண்டியனின் மனைவி என்பதற்கான அடையாள சான்றாக ஆதார் கார்டு அல்லது திருமண சான்றிதழ் என ஏதாவது ஒன்றை காட்டும்படி அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் கேட்டனர். இதனால் அவரது மனைவி, போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இது பற்றி அறிந்த கெட்டியான்பாண்டியன் சிறப்பு முகாமில் இருந்த மரத்தில் திடீரென ஏறி போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது, மாவட்ட கலெக்டர் அங்கு வரும்வரை கீழே இறங்கமாட்டேன், என்றார்.
இதையடுத்து கே.கே.நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணன் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதைத்தொடர்ந்து சுமார் 3 மணிநேரம் கழித்து அவர் மரத்தில் இருந்து கீழே இறங்கினார். இந்த சம்பவத்தால் நேற்று மதியம் சிறப்பு முகாமில் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story