ஆவடி அருகே கழிவுநீர் தொட்டிக்குள் இறங்கிய தொழிலாளி, விஷவாயு தாக்கி பலி - மற்றொருவர் ஆஸ்பத்திரியில் அனுமதி


ஆவடி அருகே கழிவுநீர் தொட்டிக்குள் இறங்கிய தொழிலாளி, விஷவாயு தாக்கி பலி - மற்றொருவர் ஆஸ்பத்திரியில் அனுமதி
x
தினத்தந்தி 6 May 2022 9:36 AM IST (Updated: 6 May 2022 9:36 AM IST)
t-max-icont-min-icon

ஆவடி அருகே கழிவுநீர் தொட்டிக்குள் இறங்கிய போது விஷவாயு தாக்கி தொழிலாளி பலியானார். மற்றொருவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

ஆவடி, 

திண்டிவனத்தைச் சேர்ந்தவர் முத்துக்குமரன் (வயது 28). இன்னும் திருமணமாகாத இவர், ஆவடியை அடுத்த பருத்திப்பட்டு என்.எஸ்.கே.கார்டன், தர்மராஜா தெருவில் வசித்து வரும் தனது அண்ணன் ஜெயமுருகன் வீட்டில் தங்கி, அதே பருத்திப்பட்டு அசோக் நிரஞ்சன் நகரில் உள்ள 4 மாடிகளில் 118 வீடுகளை கொண்ட தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் தனியார் ஒப்பந்த நிறுவனம் சார்பில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.

நேற்று காலை 11 மணியளவில் முத்துக்குமரன், அந்த அடுக்குமாடி குடியிருப்பின் வளாகத்தில் உள்ள சுமார் 20 அடி ஆழமுள்ள கழிவுநீர் தொட்டியில் 3 அடி அகலத்தில் வைக்கப்பட்டிருந்த இரும்பு மூடியை திறந்து உள்ளே இறங்கினார்.

அந்த தொட்டிக்குள் ஒரு அடி மட்டுமே கழிவு நீர் இருந்தது. அப்போது கழிவுநீர் தொட்டிக்குள் இருந்து விஷவாயு தாக்கியதால் முத்துக்குமரன் அலறியபடி உள்ளே மயங்கி விழுந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த தனியார் ஒப்பந்த நிறுவன மேலாளர் குணசேகரன் (39) ஓடிச்சென்று முத்துக்குமரனை காப்பாற்ற கழிவுநீர் தொட்டிக்குள் இறங்கினார். அப்போது அவரையும் விஷவாயு தாக்கியதால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உள்ளே மயங்கி விழுந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த குடியிருப்பு வாசிகள் அளித்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த ஆவடி தீயணைப்பு நிலைய வீரர்கள், கழிவுநீர் தொட்டிக்குள் இறங்கி, அங்கு மயங்கி கிடந்த இருவரையும் மேலே மீட்டு கொண்டு வந்தனர்.

பின்னர் இருவரையும் ஆவடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே முத்துக்குமரன் பரிதாபமாக உயிரிழந்தார். சுயநினைவின்றி இருந்த குணசேகரன், சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

மேலும் இதுபற்றி ஆவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து பலியான முத்துக்குமரன் உடலை பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து, மேலும் இதுபற்றி விசாரித்து வருகின்றனர்.

சென்னை கொளத்தூர் கெங்கையம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் திருவேங்கடம் (56). இவர், மாதவரத்தில் துப்புரவு தொழிலாளியாக வேலை செய்து வந்தார். நேற்று மாதவரத்தில் உள்ள குப்பை கிடங்கில் குப்பையை தரம் பிரிக்கும் வேலை செய்து கொண்டிருந்தார்.

அப்போது திடீரென திருவேங்கடம் மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர் திருவேங்கடம், வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

குப்பையை தரம் பிரிக்கும்போது விஷவாயு தாக்கி திருவேங்கடம் இறந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாதவரம் இன்ஸ்பெக்டர் காளிராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story