செல்போன் செயலியில் கடன் வழங்கும்- ஏஜெண்டுகள் தொல்லையால் தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை
மும்பையில் செல்போன் செலியின் கடன் வழங்கும் ஏஜெண்டுகளின் துன்புறுத்தலால் தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை செய்து கொண்டார்.
மும்பை,
மும்பையில் செல்போன் செலியின் கடன் வழங்கும் ஏஜெண்டுகளின் துன்புறுத்தலால் தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை செய்து கொண்டார்.
மார்பிங் படத்தை பரப்பினர்
மும்பை மலாடு பகுதியை சேர்ந்தவர் சந்தீப்(வயது38). இவர் தனியார் நிறுவனத்தில் விற்பனை பிரதிநிதியாக வேலை பார்த்து வந்தாா். கடந்த சில நாட்களுக்கு முன் செல்போன் செயலி மூலம் கடன் கொடுக்கும் நிறுவனத்தின் ஏஜெண்டுகள் சந்தீப்பை தொடர்பு கொண்டு பேசி உள்ளனர். அப்போது அவர்கள் உடனடியாக செயலி மூலம் வாங்கிய கடனை செலுத்துமாறு சந்தீப்பை மிரட்டினர்.
அவர்களிடம் சந்தீப், தான் செயலி மூலம் கடன் எதுவும் வாங்கவில்லை என கூறியுள்ளார். எனினும் அவர்கள் கடன் வாங்கி இருப்பதாகவும், அதனை கண்டிப்பாக திருப்பி செலுத்த வேண்டும் எனவும் சந்தீப்பை மிரட்டி உள்ளனர். இதுகுறித்து சந்தீப் தனது குடும்பத்தினரிடம் கூறியுள்ளார்.
இந்தநிலையில் கடன் நிறுவன ஏஜெண்டுகள் சந்தீப்பின் மார்பிங் செய்யப்பட்ட நிர்வாணப்படத்தை அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் உடன் வேலை பார்ப்பவர்களுக்கு அனுப்பினர். இதனால் சந்தீப் மிகுந்த மனவேதனை அடைந்தார்.
இதுகுறித்து நண்பர்கள், குடும்பத்தினரிடம் புலம்பி வந்து உள்ளார். மேலும் இதுகுறித்து குரார் போலீசிலும் புகார் அளித்து உள்ளார். போலீசில் புகார் அளித்த பிறகும் கடன் ஏஜெண்டுகள் வெவ்வெறு செல்போன்களில் இருந்து போன் செய்து சந்தீப்பை துன்புறுத்தி வந்தனர்.
தற்கொலை
இந்தநிலையில் கடன் நிறுவன ஏஜெண்டுகளின் செயலால் அவமானம் அடைந்த சந்தீப் சம்பவத்தன்று மதியம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து சென்ற போலீசார் சந்தீப்பின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து சந்தீப்பை தற்கொலைக்கு தூண்டியதாக கடன் நிறுவன ஏஜெண்டுகள் 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செல்போனில் கடன் வழங்கும் செயலியின் ஏஜெண்டுகளின் துன்புறுத்தலால் தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை செய்த சம்பவம் பொது மக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன் ரூ.6 ஆயிரம் கடனுக்காக பாந்திராவில் வாலிபரின் மார்பிங் செய்யப்பட்ட படத்தை அவரது மனைவி, குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு அனுப்பி செல்போன் செயலி கடன் ஏஜெண்டுகள் அட்டூழியத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story