சீல் வைத்த சங்க அலுவலக பூட்டு உடைப்பு 25 பேர் மீது வழக்கு
வெள்ளிமலையில் ‘சீல்’ வைக்கப்பட்ட சங்க அலுவலகத்தின் பூட்டு உடைக்கப்பட்டது தொடர்பாக 25 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
மணவாளக்குறிச்சி:
வெள்ளிமலையில் ‘சீல்’ வைக்கப்பட்ட சங்க அலுவலகத்தின் பூட்டு உடைக்கப்பட்டது தொடர்பாக 25 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
சங்க அலுவலகத்திற்கு ‘சீல்’
மணவாளக்குறிச்சி அருகே உள்ள வெள்ளிமலையில் முருகன் கோவில் உள்ளது. இந்த கோவில் வளாகத்தில் பக்தர்கள் சார்பில் கோவில் முன்னேற்ற சங்கம் செயல்பட்டு வந்தது. இந்த சங்க அலுவலகத்தை காலி செய்யுமாறு அறநிலைய துறை சார்பில் நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. ஆனால் கால அவகாசம் முடிந்தும் அதை காலி செய்யவில்லை.
இதையடுத்து நேற்று முன்தினம் காலையில் அறநிலைய துறை அதிகாரிகள் அலுவலக அறைக்கு ‘சீல்’ வைத்தனர். இதை கண்டித்து பா.ஜனதா மற்றும் இந்து அமைப்புகள், பக்தர்கள் சார்பில் நேற்று முன்தினம் காலை முதல் போராட்டம் நடந்தது.
173 பேர் கைது
போராட்டம் நடத்தியவர்களிடம் போலீசார், அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியும் முடிவு எட்டப்படவில்லை.
மாலையில் வெகுநேரமாகியும் முடிவு எட்டப்படாததால் போராட்டத்தில் ஈடுபட்ட பக்தர்கள் கோவில் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அவர்களை போலீசார் தடுத்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இறுதியில் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட 173 பேரை கைது செய்தனர். பின்னர் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.
அறை கதவின் பூட்டு உடைப்பு
இதற்கிடையே ‘சீல்’ வைக்கப்பட்ட கோவில் முன்னேற்ற சங்க அலுவலக அறை கதவின் பூட்டை உடைத்ததாக கோவில் ஸ்ரீ காரியம் சிவபாஸ்கரன் மளவாளக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
அந்த புகாரின் பேரில் கோவில் முன்னேற்ற சங்க தலைவர் சிவகுமார், கதிரேசன், ராஜேஷ், பிரபு, சுதாகர், கிருஷ்ணகுமார் மற்றும் கண்டால் தெரியும் நபர்கள் உள்பட 25 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இதேபோல் போராட்டம் நடத்தியது தொடர்பாக வருவாய் ஆய்வாளர் முத்துப்பாண்டி அளித்த புகாரின் பேரில் பா.ஜனதா மாவட்ட தலைவர் தர்மராஜ், கோவில் முன்னேற்ற சங்க தலைவர் சிவகுமார், துணைத் தலைவர் பத்மதாஸ் மற்றும் பெண்கள் உள்பட 173 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இந்த சம்பவங்களையொட்டி நேற்று கோவில் வளாகத்தில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
Related Tags :
Next Story