மராட்டியத்தில் ஆட்டோ மீது லாரி மோதி கல்லூரி மாணவிகள் உள்பட 7 பேர் பலி
அகமது நகர் அருகே ஆட்டோ மீது லாரி மோதிய விபத்தில் கல்லூரி மாணவிகள் உள்பட 7 பேர் பலியானார். 6 பேர் படுகாயம் அடைந்தனர்.
புனே,
அகமது நகர் மாவட்டம் கோபர்காவ் தாலுகாவில் நேற்று காலை 8 மணியளவில் இந்த கோர விபத்து ஏற்பட்டது.
பயங்கர மோதல்
கோபர்காவை அடுத்த மசூட்பூர் பாட்டா அருகே கன்டெய்னர் லாரி ஒன்று புனே நோக்கி சென்று கொண்டு இருந்தது.
அந்த லாரி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மற்றும் பயணிகளை ஏற்றி சென்ற ஆட்டோ மீது அடுத்தடுத்து பயங்கரமாக மோதியது.
இந்த கோர விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற 3 பேர் படுகாயம் அடைந்தனர். மேலும் ஆட்டோ தூக்கி வீசப்பட்டு சுக்குநூறாக நொறுங்கியது. ஆட்டோவில் பயணித்த 10 பேர் ரத்த வெள்ளத்தில் ஆங்காங்கே சிதறி கிடந்தனர்.
7 பேர் பலி
விபத்து பற்றி அறிந்த அக்கம் பக்கத்து கிராமத்தை சேர்ந்தவர்கள் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் போலீசாரும் விரைந்து வந்தனர். அப்போது ஆட்டோவில் பயணித்த 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது.
மோட்டார் சைக்கிள் மற்றும் ஆட்டோவில் பயணித்து படுகாயம் அடைந்த 7 பேரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். இதில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் பலி எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தவர்களில் 5 பேர் பெண்கள் ஆவர். இதில் 2 பேர் கல்லூரி மாணவிகள் என தெரியவந்தது.
காயம் அடைந்த 6 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விபத்தை ஏற்படுத்திய கன்டெய்னர் லாரி டிரைவர் தர்ஷன் சிங் (வயது 42) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் இது குறித்து கோபர்காவ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story