பூவராகசாமி கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு


பூவராகசாமி கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு
x
தினத்தந்தி 6 May 2022 10:58 PM IST (Updated: 6 May 2022 10:58 PM IST)
t-max-icont-min-icon

ஸ்ரீமுஷ்ணம் பூவராகசாமி கோவில் உண்டியலை உடைத்து பணத்தை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

ஸ்ரீமுஷ்ணம், 

ஸ்ரீமுஷ்ணத்தில் பிரசித்திபெற்ற பூவராகசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் இரவு நேர காவலாளியாக கீழவன்னியர் தெருவை சேர்ந்த ராமர் மகன் விஜய்(வயது 22) என்பவர் உள்ளார். இந்த நிலையில் நேற்று  இரவு 10 மணியளவில் விஜய் கோவில் கதவுகளை பூட்டிவிட்டு சுற்று பிரகாரம் வழியாக ரோந்து வந்தார். அப்போது அம்புஜவல்லி தாயார் சன்னதி அருகில் முகமூடி அணிந்து கொண்டு மர்மநபர் ஒருவர் இருப்பதை விஜய் பார்த்தார். 

உண்டியல் உடைப்பு

இதனால் அதிர்ச்சியடைந்த அவர், கோவிலின் முன்பக்க பூட்டை திறந்து வெளியில் வந்து மற்ற பணியாளர்களுக்கும், பொதுமக்களுக்கும் தகவல் தெரிவித்தார். இதையடுத்து பொதுமக்கள் கோவிலுக்குள் சென்றனர். அப்போது அந்த நபர் ஆஞ்சநேயர் சிலை அருகில் இருந்த உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தை திருடிக்கொண்டிருந்தார். 
பொதுமக்கள் வருவதை பார்த்ததும், அந்த நபர் அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். உடனே பொதுமக்கள் விரைந்து சென்று, அந்த நபரை பிடித்தனர். பின்னர் இதுபற்றி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். 

வாலிபர் கைது

அதன்பேரில் ஸ்ரீமுஷ்ணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாண்டிச்செல்வி, சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் மற்றும் போலீசார் விரைந்து வந்து அந்த நபரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் மயிலாடுதுறை மாவட்டம் நீடூர் ரெயிலடி தெருவை சேர்ந்த ஜெயினுல்லாபுதீன் மகன் சிராஜூதீன் (23) என்பதும், சேலத்தில் டிரைவராக வேலைபார்த்து வந்ததும் தெரியவந்தது. மேலும் இவர் ஸ்ரீமுஷ்ணத்தில் உள்ள தனது அக்காள் வீட்டிற்கு வந்தபோது கோவிலில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து சிராஜூதீனை கைது செய்த போலீசார் அவரிடமிருந்த ரூ.1,115-யை பறிமுதல் செய்தனர்.

Next Story