30 ஆயிரம் மாணவமாணவிகள் தேர்வு எழுதினார்கள்


30 ஆயிரம் மாணவமாணவிகள் தேர்வு எழுதினார்கள்
x
தினத்தந்தி 6 May 2022 11:08 PM IST (Updated: 6 May 2022 11:08 PM IST)
t-max-icont-min-icon

30 ஆயிரம் மாணவமாணவிகள் தேர்வு எழுதினார்கள்

திருப்பூர்:
திருப்பூர் மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. 29 ஆயிரத்து 908 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினார்கள். 2 ஆயிரத்து 10 பேர் தேர்வு எழுதவரவில்லை.
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு 
எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு நேற்று முதல் வருகிற 30-ந் தேதி வரை நடைபெறுகிறது. இந்த தேர்வு எழுத 358 பள்ளிகளில் படிக்கும் மொத்தம் 31 ஆயிரத்து 918 பேர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கு 108 மையங்கள் தயார் செய்யப்பட்டது. மாணவ-மாணவிகளின் பதிவெண் உள்ளிட்ட விவரங்களை தேர்வு மையங்களில் உள்ள மேஜைகளில் குறிப்பிட்டு தயார்படுத்தினார்கள்.
தேர்வு மையத்தின் முன் தேர்வறைகளின் விவரங்கள், மாணவ-மாணவிகளின் பதிவெண், ஒதுக்கீடு செய்யப்பட்ட அறை உள்ளிட்டவற்றை வரைபடமாக அறிவிப்பு பலகையில் வைத்திருந்தனர். தேர்வு மையங்களில் ஆசிரியர்கள் நின்று மாணவ-மாணவிகளுக்கு வழிகாட்டினார்கள். வினாத்தாள்கள் பாதுகாப்புடன் கொண்டு வரப்பட்டு தேர்வு மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
பறக்கும் படையினர் ஆய்வு
எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு மையங்களில் பணியாற்ற முதன்மை கண்காணிப்பாளராக 108 தலைமை ஆசிரியர்களும், 108 துறை அலுவலர்களும், அறை கண்காணிப்பாளர்களாக 1,780 ஆசிரியர்களும் நியமிக்கப்பட்டு பணியாற்றினார்கள். எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுக்கு மாவட்ட கல்வி அதிகாரிகள் மூலமாக 178 ஆசிரியர்களை கொண்ட பறக்கும்படை அமைக்கப்பட்டுள்ளது.
ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்துறை இணை இயக்குனர் வாசு தலைமையில் மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் கணேசன், உடற்கல்வி ஆய்வாளர் முருகேஷ்வரி ஆகியோர் கொண்ட பறக்கும்படையினர் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் மெட்ரிக்குலேஷன் பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையங்களை ஆய்வு செய்தனர்.
2 ஆயிரத்து 10 பேர் தேர்வு எழுதவில்லை 
இதுபோல் மற்ற பறக்கும்படையினரும் தேர்வு மையங்களுக்கு சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர். மாணவ-மாணவிகள் ஒழுங்கீன செயல்களில் ஈடுபடுகிறார்களா? என்று கண்காணித்தனர். மாவட்டம் முழுவதும் நேற்று 29 ஆயிரத்து 908 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினார்கள். 2 ஆயிரத்து 10 பேர் தேர்வு எழுத வரவில்லை. மாணவ-மாணவிகள் தேர்வு மையங்களுக்கு எளிதில் சென்று வரும் வகையில் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் பஸ்கள் இயக்கப்பட்டன. அதுபோல் தேர்வு மையங்களில் மின்தட்டுப்பாடு இல்லாமலும், ஜெனரேட்டர் வசதியும் செய்யப்பட்டு இருந்தது.

Next Story