தமிழக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க மறுக்கும் என்.எல்.சி.க்கு பூட்டு போடும் போராட்டம் அன்புமணி ராமதாஸ் எம்.பி. அறிவிப்பு
தமிழக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க மறுக்கும் என்.எல்.சி.க்கு பூட்டு போடும் போராட்டம் நடத்தப்படும் என்று கடலூரில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. கூறினார்.
கடலூர்,
கடலூர் கிழக்கு மற்றும் வடக்கு மாவட்ட பா.ம.க. பொதுக்குழு கூட்டம் கடலூர் சுப்புராயலு ரெட்டியார் திருமண மண்டபத்தில் நடந்தது. கூட்டத்துக்கு கிழக்கு மாவட்ட செயலாளர் சண்.முத்துக்கிருஷ்ணன் தலைமை தாங்கினார். வடக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் வரவேற்றார்.
மாநில வன்னியர் சங்க தலைவர் பு.தா. அருள்மொழி, மாநில சொத்து பாதுகாப்புக்குழு தலைவர் டாக்டர் கோவிந்தசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மாநில இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
ஆட்சியை பிடிக்கும்
கட்சியை மறுசீரமைப்பு செய்து வருகிறோம். வேறு எந்த கட்சியிலும் இல்லாத அளவுக்கு நம்மிடம் இளைஞர்கள் அதிகம் உள்ளனர். ஆகவே வருகிற 2026-ம் ஆண்டு பா.ம.க. ஆட்சியை பிடிக்கும். பா.ம.க. வித்தியாசமான கட்சி என்று மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர்.
வாய்ப்பு
42 ஆண்டுகளாக மதுவை ஒழிக்க போராடி வருபவர் டாக்டர் ராமதாஸ். முதல்-அமைச்சர் ஆக வேண்டும் என்ற எண்ணம் இல்லை. நமக்கு அதிகாரம் வர வேண்டும். அந்த அதிகாரம் இருந்தால் இந்தியாவில் தமிழகத்தை முதன்மை மாநிலமாக மாற்றுவேன். வருகிற 4 ஆண்டுகள் மிக முக்கியமானது. அடுத்து தி.மு.க. ஆட்சிக்கு வராது. அ.தி.மு.க.வுக்கும் வாய்ப்பு இல்லை. நமக்கு தான் மக்கள் வாய்ப்பு தருவார்கள்.
பா.ம.க. 2.0 தொடங்கி இருக்கிறோம். நாம் ஒற்றுமையாக இருக்க வேண்டும். சுற்றுச்சூழல் பாதிப்பால் இந்தியாவிலேயே கடலூர் கருப்பு மாவட்டமாக உள்ளது. காவல் துறையினர் நம்மீது பொய் வழக்கு போட்டு வருகிறார்கள். இதை கண்டித்து எனது தலைமையில் தொடர் போராட்டம் நடக்கும். 5 ஆண்டுகள் தொழிற்சாலை ஆரம்பிக்கவில்லையென்றால், அந்த நிலத்தை நிலம் கொடுத்தவர்களுக்கு வழங்க வேண்டும். இதை வலியுறுத்தி போராட்டம் நடத்தப்படும்.
போராட்டம்
என்.எல்.சி. இந்தியா நிறுவனம் நமக்கு தேவையில்லை. தமிழக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க மறுக்கிறது. நிலத்தடி நீர் மட்டம் குறைந்து விட்டது. சுற்றுச்சூழல், விவசாயம் பாதிக்கப்பட்டு வருகிறது. ஆகவே என்.எல்.சி.க்கு விரைவில் பூட்டு போடும் போராட்டம் எனது தலைமையில் நடக்கும். 10.5 சதவீத இட ஒதுக்கீடு கிடைக்கும் என்று நம்புகிறேன். கிடைக்காவிட்டால் என்ன நடக்கும் என்று அரசுக்கு தெரியும். அதுவரை பொறுமையாக இருங்கள்.
இவ்வாறு அன்புமணி ராமதாஸ் கூறினார்.
பாராட்டு
தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க வேண்டும். ஜனாதிபதி ஒப்புதல் வழங்கி அதை சட்டமாக கொண்டு வர வேண்டும். தி.மு.க. அரசின் ஓராண்டு காலத்தில் 10 மாதம் கொரோனா தடுப்பு நடவடிக்கை எடுத்தார்கள். இதை பாராட்டுகிறேன். பள்ளி மாணவிகள், பெண்கள் மது அருந்துவதுதான் திராவிடமாடலா, எனவே தேர்தல் வாக்குறுதி அளித்தபடி பூரண மதுவிலக்கை கொண்டு வர வேண்டும் என்றார்.
Related Tags :
Next Story