பட்டா வழங்கக்கோரி மனு அளிக்கும் போராட்டம்
மயிலாடுதுறையில் கோவில் நிலங்களில் குடியிருப்போருக்கு பட்டா வழங்கக்கோரி மனு அளிக்கும் போராட்டம் நடந்தது
மயிலாடுதுறை;
மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு சார்பில் மனு கொடுக்கும் போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடந்தது. போராட்டத்துக்கு கட்சியின் மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமை தாங்கினார். விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் ஸ்டாலின், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் துரைராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக நடந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழகம் முழுவதும் கோவில், மடம், அறக்கட்டளை, வக்பு வாரியம், தேவாலய இடங்கள் மற்றும் பயன்பாடு இல்லாத நீர்நிலை புறம்போக்கு இடங்களில் நீண்டகாலமாக குடியிருப்போருக்கு பட்டா வழங்க வேண்டும். அறநிலைய சட்டம் 34-ன் படி பல தலைமுறைகளாக கோவில் இடங்களில் குடியிருப்போருக்கு நியாயமான விலையை நிர்ணயித்து கிரைய தொகையை தவணை முறையில் பெற்றுக்கொண்டு இடங்களை பயனாளிகளுக்கு சொந்தமாக்கிட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. தொடர்ந்து மாவட்டம் முழுவதும் இருந்து வந்து போராட்டத்தில் கலந்துகொண்ட 200-க்கும் மேற்பட்டோர் தங்களுக்கு பட்டா வழங்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
Related Tags :
Next Story