கெட்டுப்போன 310 கிலோ கோழி இறைச்சி பறிமுதல்
நாகை, திருக்குவளையில் கெட்டுப்போன 310 கிலோ கோழி இறைச்சியை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
வெளிப்பாளையம்:
நாகை, திருக்குவளையில் கெட்டுப்போன 310 கிலோ கோழி இறைச்சியை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
கடைகளில் ஆய்வு
கேரளாவில் ‘ஷவர்மா’ சாப்பிட்ட மாணவி ஒருவர் பலியானார். தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டில் ‘ஷவர்மா’ சாப்பிட்ட கால்நடை மருத்துவ மாணவர்கள் 3 பேர் மயக்கம் அடைந்தனர்.
இதனையடுத்து நாகை மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் உத்தரவின் பேரில் நாகை மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் புஷ்பராஜ் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் நாகையில் நேற்று இறைச்சி மொத்தமாக விற்பனை செய்யும் கடைகளில் திடீரென ஆய்வு செய்தனர்.
310 கிலோ கெட்டுப்போன கோழி இறைச்சி பறிமுதல்
இதில் நாகை முனிசிபல் வண்டிப்பேட்டை பகுதியில் உள்ள ஒரு கடையில் அதிகாரிகள் ஆய்வு செய்தபோது நாமக்கல் மாவட்டத்தில் இருந்து கோழி இறைச்சியை மொத்தமாக வாங்கி வந்து அதை துண்டு, துண்டாக வெட்டி மற்ற கடைகளுக்கு விற்பனை செய்ய கெட்டுப்போன 250 கிலோ கோழி இறைச்சி வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து கெட்டுப்போன 250 கிலோ கோழி இறைச்சியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதேபோல் திருக்குவளையில் உள்ள ஓட்டல்களில் ஆய்வு செய்தனர். இதில் 60 கிலோ கெட்டுப்போன கோழி இறைச்சி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.
கடும் நடவடிக்கை
கெட்டுப்போன கோழி இறைச்சி நாமக்கல் மாவட்டத்தில் இருந்து 15 நாட்களுக்கு முன்பு பொட்டலங்களில் கொண்டு வரப்பட்டு பல்வேறு கடைகளுக்கு விற்பனை செய்யப்பட்டது தெரிய வந்தது.
ஓட்டல்கள் மற்றும் இறைச்சி கடைகளில் கெட்டு்ப்போன இறைச்சிகளை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் புஷ்பராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Related Tags :
Next Story