டேன்டீ தொழிலாளர் ஊதிய விவகாரத்தில் விரைவில் சுமுக தீர்வு


டேன்டீ தொழிலாளர் ஊதிய விவகாரத்தில் விரைவில் சுமுக தீர்வு
x
தினத்தந்தி 6 May 2022 11:56 PM IST (Updated: 6 May 2022 11:56 PM IST)
t-max-icont-min-icon

டேன்டீ தொழிலாளர் ஊதிய விவகாரத்தில் விரைவில் சுமுக தீர்வு காணப்படும் என்று அமைச்சர் சி.வி.கணேசன் கூறினார்.

ஊட்டி

டேன்டீ தொழிலாளர் ஊதிய விவகாரத்தில் விரைவில் சுமுக தீர்வு காணப்படும் என்று அமைச்சர் சி.வி.கணேசன் கூறினார்.

ஆலோசனை கூட்டம்

நீலகிரி மாவட்ட நிர்வாகம் மற்றும் வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம், ஊட்டி தமிழகம் மாளிகையில் இன்று நடந்தது. இதற்கு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் தலைமை தாங்கினார். 

கூட்டத்தில், வருகிற 12-ந் தேதி நடைபெற உள்ள வேலைவாய்ப்பு முகாமில் சுமார் 200 நிறுவனங்கள் கலந்துகொள்ளவும், அதன் மூலம் சுமார் 15 ஆயிரம் காலிப்பணியிடங்களை நிரப்பவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். குறைந்தது 1000 பேருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமைச்சர் அறிவுறுத்தினார். 

நலத்திட்ட உதவிகள்

முன்னதாக அமைச்சர் சி.வி.கணேசன் நிருபர்களிடம் கூறியதாவது:- 
தொழிலாளர் நலத்துறையில் இதுவரை 37 லட்சத்து 50 ஆயிரம் அமைப்பு சாரா தொழிலாளர்கள் பதிவு செய்து உள்ளனர். அதில் கடந்த ஆட்சி காலத்தில் ஏறக்குறைய 75 ஆயிரம் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்காமல் இருந்தது. இதற்காக ஆய்வுக்கூட்டங்கள் நடத்தப்பட்டு, அதன் மூலம் தொழிலாளர்கள் அடையாளம் காணப்பட்டு, முதற்கட்டமாக 50 ஆயிரம் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.தி.மு.க. அரசு பொறுப்பேற்று ஓராண்டு நிறைவு பெறுவதையொட்டி, அமைப்பு சாரா தொழிலாளர்கள் 37 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு வழங்க வேண்டிய நலத்திட்டங்களில் 4 லட்சத்து 6 ஆயிரம் பேருக்கு ரூ.299 கோடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

இந்தியாவில் எங்கும் இல்லாத வகையில் 10 ஆயிரம் கட்டுமான தொழிலாளர்களுக்கு வீடு கட்டி தரும் திட்டம் அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் ரூ.2 ஆயிரத்து 877 கோடியில் சுமார் 71 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது. மேலும் புதிதாக 11 தொழில் பயிற்சி நிலையங்கள் அமைக்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ளார். வருகிற ஆகஸ்டு மாதத்திற்குள் 1 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். 

சுமுக தீர்வு

டேன்டீ தொழிலாளர்களின் குறைந்தபட்ச ஊதிய விவகாரம் தொடர்பாக ஆய்வு நடத்த ஏற்கனவே ஒரு குழு அமைக்கப்பட்டது. தற்போது கூடுதலாக ஒரு துணை குழுவும் அமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த விவகாரத்தில் விரைவில் சுமுக தீர்வு காணப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.  

தொடர்ந்து வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ள ஊட்டி பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகளை அமைச்சர் நேரில் ஆய்வு மேற்கொண்டார். இதில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குனர் வீரராகவராவ், கலெக்டர் அம்ரித், போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ் ராவத், மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷினி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


Next Story