போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை ஒருமையில் திட்டிய பா.ஜனதா எம்.எல்.ஏ.


போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை ஒருமையில் திட்டிய பா.ஜனதா எம்.எல்.ஏ.
x
தினத்தந்தி 7 May 2022 2:28 AM IST (Updated: 7 May 2022 2:28 AM IST)
t-max-icont-min-icon

லஞ்சம் கொடுத்து பணியில் சேர்ந்ததாக கூறி புதிதாக நியமிக்கப்பட்ட சப்-இன்ஸ்பெக்டரை, பா.ஜனதா எம்.எல்.ஏ. திட்டி தீர்த்து பேசிய செல்போன் உரையாடல் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

சிக்கமகளூரு: லஞ்சம் கொடுத்து பணியில் சேர்ந்ததாக கூறி புதிதாக நியமிக்கப்பட்ட சப்-இன்ஸ்பெக்டரை, பா.ஜனதா எம்.எல்.ஏ. திட்டி தீர்த்து பேசிய செல்போன் உரையாடல் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

 எம்.பி. குமாரசாமி எம்.எல்.ஏ.

சிக்கமகளூரு மாவட்டம் மூடிகெரே தாலுகா மல்லந்தூர் போலீஸ் நிலையத்தில் புதிய சப்-இன்ஸ்பெக்டராக ரவீஸ் என்பவர் நியமிக்கப்பட்டார். அதன்படி ரவீஸ், மல்லந்தூர் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பதவியேற்று கொண்டார். இதற்கு முன் ரவீஸ் பெங்களூவில் பணியாற்றியதாக கூறப்படுகிறது.

இதையறிந்த மூடிகெரே தொகுதி பா.ஜனதா எம்.எல்.ஏ. எம்.பி. குமாரசாமி, சப்-இன்ஸ்பெக்டர் ரவீசை செல்போனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். 
அப்போது குமாரசாமி எம்.எல்.ஏ, ரவீசை லஞ்சம் கொடுத்து பணியில் சேர்ந்ததாக கூறி ஒருமையில் திட்டி தீர்த்ததாக தெரிகிறது. இதற்கு சப்-இன்ஸ்பெக்டர் ரவீஸ் தன்னை, போலீஸ் ஐ.ஜி. அனுப்பி வைத்ததாகவும், மறுநாள் காலை உங்களை வீட்டிற்கு வந்து சந்திப்பதாக பதிலளித்துள்ளார்.

 அதற்கு குமாரசாமி வீட்டுக்கு வந்தால் உன்னை உதைத்து அனுப்புவேன் என ஆக்ரோஷமாக பேசியுள்ளார். இதுதொடர்பான செல்போன் ஆடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியது. தற்போது அவை வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இதுபற்றி குமாரசாமி எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

 எனது தொகுதியில்...

நான், சப்-இன்ஸ்பெக்டர் ரவீசை திட்டியது உண்மைதான். ஏனென்றால் மாநிலத்தில் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வில் முறைகேடு நடந்துள்ளது. அதனால் மல்லந்தூர் போலீஸ் நிலையத்தில் புதிதாத பணியில் சேர்ந்த சப்-இன்ஸ்பெக்டர் ரவீஸ் லஞ்சம் கொடுத்து வந்திருக்கலாம். எனது தொகுதியில் ஊழல் செய்பவர்கள் பணியில் இருக்கக் கூடாது. மேலும் ரவீஸ் பணியில் சேருவதற்கு முன்பு என்னிடம் எந்த ஒரு தகவலும் தெரிவிக்கவில்லை. 
இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையே காங்கிரஸ் மாவட்ட தலைவர் அம்சுமந்த் சப்-இன்ஸ்பெக்டர் ரவீசிடம், குமாரசாமி லஞ்சம் எதிர்பார்த்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து   அவரிடம் விசாரணை நடத்தும்படி போலீசாருக்கு வலியுறுத்தியுள்ளார்.

Next Story