விடுதியில் புகுந்து சுற்றுலா பயணியிடம் திருடிய வாலிபர் கைது
சிருங்கேரி தாலுகாவில் விடுதியில் புகுந்து சுற்றுலா பயணியிடம் திருட்டில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
சிக்கமகளூரு: சிருங்கேரி தாலுகாவில் விடுதியில் புகுந்து சுற்றுலா பயணியிடம் திருட்டில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
வாலிபர் கைது
சிக்கமகளூரு மாவட்டம் சிருங்கேரி (தாலுகா) டவுன் பகுதியில் ஒரு விடுதி உள்ளது. இந்த விடுதியில் சுற்றுலா வந்த பயணி ஒருவர் அறை எடுத்து தங்கி இருந்தார். அவர் தனது அறையில் ஓய்வு எடுத்து கொண்டிருந்தபோது திடீரென உள்ளே புகுந்த மர்மநபர் அவருடைய கை பையை திருடிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றார்.
பின்னர் இதுகுறித்து அந்த பயணி கொடுத்த புகாரின் பேரில் சிருங்கேரி போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அந்த விடுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர்.
இதையடுத்து விடுதியில் திருடியதாக சிருங்கேரி பஸ் நிலையம் அருகே நின்று கொண்டிருந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் விடுதியில் புகுந்து சுற்றுலா பயணியிடம் திருட்டில் ஈடுபட்டதை ஒப்பு கொண்டார். இதையடுத்து அவரிடம் இருந்த பையை மீட்டு உரிமையாளரிடம் போலீசார் ஒப்படைத்தனர். போலீசாரின் இந்த துரித நடவடிக்கைக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.
கம்பி வேலி திருட்டு
இதேபோல் சிருங்கேரி தாலுகா நெம்மூர் கிராமத்தை சேர்ந்த ரத்னாகர் என்பவர் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் வெளியே சென்று இருந்தார். அப்போது அங்கு வந்த மர்மநபர்கள் சிலர் வீட்டில் பூட்டை உடைத்து 5 கிராம் தங்க நகை மற்றும் ரூ.60 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை திருடிவிட்டு தப்பி சென்றனர்.
இதுபோல் சிருங்கேரி தாலுகா மெனசே கிராமத்தை சேர்ந்த பிரபு என்பவர் வீட்டின் முன்பு போடப்பட்டிருந்த கம்பி வேலியை மர்மநபர்கள் திருடி சென்றுள்ளனர். இந்த சம்பவங்கள் குறித்து சிருங்கேரி போலீசார் தனித்தனியே வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடிவருகின்றனர். சிருங்கேரி தாலுகாவில் ஒரே நாளில் 3 இடங்களில் திருட்டு சம்பவம் நடந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story