`எஸ்.எஸ்.எல்.சி. தமிழ் தேர்வு எளிதாக இருந்தது' - மாணவ-மாணவிகள் பேட்டி
எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. தமிழ் தேர்வு எளிதாக இருந்ததாக மாணவ-மாணவிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
நெல்லை:
தமிழக பள்ளி கல்வித்துறை சார்பில் கொரோனா ஊரடங்கிற்கு பிறகு நடப்பு கல்வி ஆண்டில் பொதுத்தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் பிளஸ்-2 பொதுத்தேர்வு தொடங்கியது. இந்த நிலையில் நேற்று எஸ்.எஸ்.எல்.சி. எனப்படும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியது. நெல்லை மாவட்டத்தில் இதற்காக பள்ளிகளில் 91 மையங்கள், பாளையங்கோட்டை மத்திய சிறையில் ஒரு மையம், 4 தனித்தேர்வு மையங்கள் என 96 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன.
நேற்று முதல் நாளில் மொழிப்பாடமாக தமிழ் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வுக்கு 279 பள்ளிகளை சேர்ந்த 24,562 மாணவ-மாணவிகள், சிறை கைதிகள் 11 பேர், தனித்தேர்வர்கள் 780 பேர் என மொத்தம் 25,353 பேர் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டிருந்தனர். அவர்கள் நேற்று காலை 9 மணி அளவில் தேர்வு மையங்களுக்கு தயார் நிலையில் வந்தனர். வரும் வழியில் வழிபாட்டு தலங்களில் வழிபட்டனர். மேலும் பள்ளிகளில் கூட்டு வழிபாடு நடத்தப்பட்டது. மாணவர்களுக்கு தேர்வு பயத்தை நீக்கும் வகையில் ஆசிரியர்கள் தைரியம் சொல்லி தேர்வு அறைகளுக்கு அனுப்பி வைத்தனர்.
தேர்வு கண்காணிப்பு பணியில் மொத்தம் 1,892 பேர் ஈடுபட்டனர். முதன்மை கண்காணிப்பாளர்கள், துறை அலுவலர்கள், அறை கண்காணிப்பாளர்கள், சொல்வதை எழுதுவதற்கு 120 ஆசிரியர்கள், நிலையான பறக்கும் படையினர் 156 பேர், அதிகாரிகள் தலைமையில் 8 சிறப்பு பறக்கும் படையினர் என மொத்தம் 1,892 பேர் இந்த தேர்வை கண்காணித்து, நடத்தும் பணியில் ஈடுபட்டனர்.
தேர்வு முடிந்ததும் மாணவ-மாணவிகள் உற்சாகமாக வெளியே வந்தனர். அவர்கள் தமிழ் தேர்வு எளிதாக இருந்ததாக கூறினார்கள். நெல்லையை சேர்ந்த மாணவர் சூர்யபிரகாஷ் கூறுகையில், நாங்கள் 8-ம் வகுப்பு, 9-ம் வகுப்பு தேர்வு எழுதாமல் நேரடியாக 10-ம் வகுப்பு படிக்க வந்து விட்டோம். இந்த ஆண்டு கொரோனா இல்லாததால் வகுப்புகள் தொடர்ந்து நடைபெற்றது. இதனால் நன்றாக படித்து தேர்வுக்கு தயாரானோம். தேர்வை பயமின்றி, நல்லபடியாக எழுதினோம்’’ என்றார்.
மாணவர் கார்த்திகேயன் கூறுகையில், ‘‘தேர்வை பயம் இன்றி எழுதினோம். தமிழ் தேர்வு எளிதாக இருந்தது. புத்தகத்தில் இருந்த வினாக்களே கேட்கப்பட்டிருந்தது’’ என்றார்.
மாணவி இந்துஜா வாணி கூறுகையில், ‘‘கொரோனாவுக்கு பிறகு பொதுத்தேர்வை எழுதினாலும், எந்தவித பயமும் இல்லை. தைரியமாகவும், நன்றாகவும் தேர்வை எழுதி உள்ளோம்’’ என்றார்.
மாணவி ஐஸ்வர்யா கூறுகையில், ‘‘தமிழ் தேர்வு எளிமையாக இருந்தது. பாடப்புத்தகத்தில் ஒவ்வொரு பாடத்தின் முடிவிலும் கொடுக்கப்பட்டிருந்த கேள்விகளே பொதுத்தேர்விலும் கேட்கப்பட்டிருந்தது. இது எளிதாக தேர்வு எழுத காரணமாக அமைந்தது’’ என்றார்.
Related Tags :
Next Story