எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வை 22 ஆயிரத்து 756 மாணவ-மாணவிகள் எழுதினர்


எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வை 22 ஆயிரத்து 756 மாணவ-மாணவிகள் எழுதினர்
x
தினத்தந்தி 7 May 2022 3:38 AM IST (Updated: 7 May 2022 3:38 AM IST)
t-max-icont-min-icon

எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வை 22 ஆயிரத்து 756 மாணவ-மாணவிகள் எழுதினர்.

புதுக்கோட்டை:

எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு
தமிழகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. மாணவர்களுக்கான பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. முதல் நாளில் நேற்று தமிழ் பாடத்தேர்வு நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டத்தில் 119 தேர்வு மையங்களில் தேர்வு நடைபெற்றது. தேர்வை எழுதுவதற்காக மாணவ-மாணவிகள் மிகுந்த ஆர்வமுடன் தேர்வறைக்கு காலையில் வந்தனர். மேலும் மாணவ-மாணவிகளுக்கு பெற்றோர் ஆசி வழங்கியும், ஆசிரியர்கள் வாழ்த்தியும் தேர்வு மையத்திற்குள் அனுப்பினர்.
தேர்வர்களும் வழிபாடு நடத்தி நம்பிக்கையோடு தேர்வெழுத சென்றனர். தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட்ட பொருட்களை தவிர மற்றவை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டது. தேர்வு நேற்று காலை 10 மணிக்கு தொடங்கி பகல் 1.15 மணிக்கு முடிவடைந்தது.
22 ஆயிரத்து 756 பேர் எழுதினர்
மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தமிழ் பாடத்தேர்வை 23 ஆயிரத்து 604 மாணவ-மாணவிகள் எழுத அனுமதிக்கப்பட்டிருந்தது. இதில் 22 ஆயிரத்து 756 பேர் தேர்வு எழுதினர். 848 பேர் தேர்வு எழுத வரவில்லை. தேர்வு முடிந்ததும் விடைத்தாள்கள் அனைத்தும் பாதுகாப்பாக மையங்களுக்கு எடுத்து செல்லப்பட்டன. இதேபோல் வினாத்தாள்களும் பலத்த பாதுகாப்புடன் தேர்வு மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன.
தேர்வு மையங்களை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி சாமி.சத்தியமூர்த்தி பார்வையிட்டார். இதேபோல் புதுக்கோட்டையில் ராணியார் அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளி உள்ளிட்ட தேர்வு மையங்களில் மாவட்ட கல்வி அலுவலர் மஞ்சுளா ஆய்வு மேற்கொண்டார். வருகிற 14-ந் தேதி விருப்ப மொழி பாடத்தேர்வு நடைபெற உள்ளது. எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு வருகிற 30-ந் தேதி வரை நடைபெற உள்ளது.

Next Story