பிரியாணி சாப்பிட்ட மேலும் 14 பேர் மருத்துவமனையில் அனுமதி
பிரியாணி சாப்பிட்ட மேலும் 14 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
அறந்தாங்கி:
வாந்தி-மயக்கம்
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி செந்தமிழ் நகரை சேர்ந்தவர் சித்திரைவேலு. இவர் புதிதாக வீடு கட்டி வருகிறார். இந்த கட்டிட வேலைக்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பு அறந்தாங்கி பகுதியை ேசா்ந்்த 40 தொழிலாளர்கள் வந்துள்ளனர். இவர்கள் சாப்பிடுவதற்காக ஒரு பிரியாணி கடையில் இருந்து வாங்கி வரப்பட்ட பிரியாணி பார்சல்களை சித்திரைவேலு வழங்கினார்.
அவர்கள் வேலை முடிந்து வீட்டிற்கு சென்றபின்னர், வீட்டில் உள்ளவர்களுடன் சேர்ந்து பிரியாணியை சாப்பிட்டுள்ளனர். அவ்வாறு பிாியாணி சாப்பிட்டவர்களுக்கு நேற்று முன்தினம் காலை வாந்தி-மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மாணவ, மாணவிகள் உள்பட 27 ேபர் அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதையடுத்து அந்த பிரியாணி கடைக்கு `சீல்' வைக்கப்பட்டது.
மேலும் 14 பேருக்கு...
இந்நிலையில் இந்த சம்பவத்தில் பிரியாணி சாப்பிட்ட மேலும் 14 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து வாந்தி, மயக்கம் ஏற்பட்ட சுரேஷ்(வயது 40), மனோஜ்(22), சிவக்குமார்(42), மலைக்கண்ணன்(52), விஜயலெட்சுமி(22), செல்வி(38) மற்றும் பள்ளி மாணவ, மாணவிகளான மகேஸ்வரன்(14), ரஞ்சித்(15), வீரபாண்டி(13), ராஜேஷ்(11), ராமநாதன்(15), அய்யப்பன்(9), புவனா(12), ஜனனி(13) ஆகியோர் அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இதன்படி மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட ெமாத்தம் 41 பேரில் பிளஸ்-2 படிக்கும் மாணவர்களான ஹரிசுதன், பார்த்திபன், மாணவி அபிநயா ஆகியோரும் அடங்குவர். இவர்கள் 3 பேரும் நேற்று முன்தினம் தொடங்கிய பிளஸ்-2 பொதுத்தேர்வில் தமிழ் பாட தேர்வை எழுதிவிட்டு வந்த பின்னரே, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற 10-ம் வகுப்பு மாணவர் ராமநாதன், நேற்று காலை மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இதையடுத்து அவர் தேர்வு மையத்திற்கு சென்று பொதுத்தேர்வை எழுதியது குறிப்பிடத்தக்கது.
தேர்வு எழுத அறிவுறுத்தல்
இது குறித்து அறந்தாங்கி அரசு மருத்துவமனையின் தலைமை டாக்டர் சேகர் கூறுகையில், பிரியாணி சாப்பிட்டதால் ஏற்பட்ட வாந்தி, மயக்கத்தால் மாணவர்கள் அச்சமடைய வேண்டாம். தற்போது மருத்துவமனையில் உள்ள டாக்டர்கள் மூலம், அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மாணவர்கள் தேர்வு எழுதும் அளவிற்கு உடல்நலம் தேறி வருகின்றனர். அவர்கள் இளநீர், ஆரஞ்சு ஜூஸ் போன்றவற்றை குடித்துவிட்டு, குளுக்கோசை தண்ணீரில் கலந்து எடுத்துக்கொண்டு தேர்வு மையத்திற்கு சென்று, தேர்வு எழுத அறிவுறுத்தப்பட்டுள்ளது, என்றார்.
Related Tags :
Next Story