67-வது ரெயில்வே வார நிகழ்ச்சி: சிறப்பாக பணியாற்றிய ஊழியர்களுக்கு விருது - பொது மேலாளர் பி.ஜி.மால்யா வழங்கினார்


67-வது ரெயில்வே வார நிகழ்ச்சி: சிறப்பாக பணியாற்றிய ஊழியர்களுக்கு விருது - பொது மேலாளர் பி.ஜி.மால்யா வழங்கினார்
x
தினத்தந்தி 7 May 2022 5:28 PM IST (Updated: 7 May 2022 5:28 PM IST)
t-max-icont-min-icon

தெற்கு ரெயில்வேயில் சிறப்பாக பணியாற்றிய 41 உயர் அதிகாரிகள், 157 ரெயில்வே ஊழியர்களுக்கு நேற்று பொதுமேலாளர் பி.ஜி.மால்யா விருதுகள் வழங்கினார்.

சென்னை,

இந்தியா முழுவதும் 67-வது ரெயில்வே வாரம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி தெற்கு ரெயில்வே சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வந்தது.

இந்த நிலையில் தெற்கு ரெயில்வேயில் சிறப்பாக பணியாற்றிய அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. சென்னை ஐ.சி.எப்.-ல் உள்ள அம்பேத்கர் அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு தெற்கு ரெயில்வே பொது மேலாளர் பி.ஜி.மால்யா தலைமை தாங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் தெற்கு ரெயில்வேயின் முதன்மை தலைமை பணியாளர் அதிகாரி கே.ஹரிகிருஷ்ணன், மூத்த துணை பொது மேலாளர் பி.மகேஷ், தெற்கு ரெயில்வே பெண்கள் சங்கத்தின் தலைவர் ரேணுகா ஜி.மால்யா, ரெயில்வே தொழிற்சங்க பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் தெற்கு ரெயில்வேயில் சிறப்பாக பணியாற்றிய 41 உயர் அதிகாரிகள், 157 ஊழியர்களுக்கு பொதுமேலாளர் விருது வழங்கினார். மேலும் கடந்த ஆண்டு சிறப்பாக செயல்பட்ட தெற்கு ரெயில்வேயில் உள்ள பணிமனை, கோட்டங்கள், பிரிவுகளுக்கு 37 கேடயங்களை பொதுமேலாளர் பி.ஜி.மால்யா வழங்கினார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-

தெற்கு ரெயில்வே கட்டுமானம், பொறியியல் மற்றும் இதர துறைகளில் சிறப்பான பணியை செய்து வருகிறது. தெற்கு ரெயில்வே கடந்த ஆண்டு விபத்துகள் இன்றி சேவை செய்துள்ளது. இது பெரிய சாதனை ஆகும்.

இதுபோல் கடந்த ஆண்டில் 30.56 மில்லியன் டன் சரக்கு கையாண்டு சாதனை படைத்துள்ளது. மேலும் இந்திய ரெயில்வேயின் எதிர்கால வளர்ச்சி திட்டங்களை தெற்கு ரெயில்வேயில் விரைந்து நடத்த ஆயத்தமாக இருக்க வேண்டும்.

தெற்கு ரெயில்வேயின் பாதுகாப்பு துறையின் செயல்பாடுகள் சிறப்பாக உள்ளது. குறிப்பாக நிர்பயா நிதியின் மூலம் 43 ரெயில் நிலையங்களில் சி.சி.டி.வி. கேமிராக்கள் பொருத்தும் பணி நடைபெற்றுள்ளது. தொலைத்தொடர்பு தொழில்நுட்பத்தை சிறப்பாக பயன்படுத்தியது பாராட்டக்கூடியது. மத்திய மற்றும் மாநில அளவிலான ஒத்துழைப்பு மற்றும் இதர தொழிற்சங்கங்களின் கூட்டு செயல்பாடு நம் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கிறது.

தெற்கு ரெயில்வேயின் தொழிலாளர்கள் தான் அதன் மிகப் பெரிய பலம். எனவே தொழிலாளர்கள் அனைவரும் அவர்களது உடலை பேணிகாக்க யோகா மற்றும் உடற்பயிற்சியை தொடர்ந்து செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story