நடத்தையில் சந்தேகத்தால் தகராறு: மனைவி வேலை பார்த்த நிறுவனத்தில் பெட்ரோல் குண்டு வீசிய கணவர்


நடத்தையில் சந்தேகத்தால் தகராறு: மனைவி வேலை பார்த்த நிறுவனத்தில் பெட்ரோல் குண்டு வீசிய கணவர்
x
தினத்தந்தி 7 May 2022 5:54 PM IST (Updated: 7 May 2022 5:54 PM IST)
t-max-icont-min-icon

நடத்தையில் சந்தேகப்பட்டதால் ஏற்பட்ட தகராறில் மனைவி பிரிந்து சென்றதால் அவர் வேலை பார்த்த நிறுவனத்தில் பெட்ரோல் குண்டு விசிய கணவரை போலீசார் கைது செய்தனர்.

பூந்தமல்லி,

ஆவடியை அடுத்த திருமுல்லைவாயல் பகுதியை சேர்ந்தவர் விஷ்ணு (வயது 30). வீடுகளுக்கு பால் பாக்கெட் போடும் வேலை செய்து வந்தார். ஏற்கனவே திருமணமாகி முதல் மனைவியை பிரிந்த விஷ்ணு, 2-வதாக 26 வயதான இளம்பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர் வடபழனியில் உள்ள தனியார் இன்சூரன்ஸ் கம்பெனியில் வேலை செய்து வருகிறார்.

2-வது மனைவியின் நடத்தையில் விஷ்ணு சந்தேகப்பட்டார். இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. அடிக்கடி மனைவி வேலை செய்யும் கம்பெனிக்கு சென்று தகராறு செய்தார். இதனால் அவருடைய மனைவி கோபித்துக்கொண்டு கணவரை விட்டு பிரிந்து தனது தாய் வீட்டுக்கு சென்று விட்டார். அங்கிருந்தபடியே வேலைக்கு சென்று வந்தார்.

2-வது மனைவியும் தன்னை விட்டு பிரிந்து சென்றதால் ஆத்திரமடைந்த விஷ்ணு, தனது மனைவி வேலை செய்யும் வடபழனியில் உள்ள நிறுவனத்துக்கு சென்று பெட்ரோல் குண்டை வீசி விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். மேலும் அதனை வீடியோவாக எடுத்து மனைவிக்கு அனுப்பி மிரட்டலும் விடுத்தார்.

பெட்ரோல் குண்டு வீசிய போது அங்கு யாரும் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இது குறித்து வடபழனி போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த விஷ்ணுவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Next Story