தேனியில் கோவிலில் சாமி சிலைகளை கொள்ளையடித்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
தேனியில் கோவிலில் சாமி சிலைகளை கொள்ளையடித்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
தேனி:
தேனி அன்னஞ்சியில் போலீஸ் நிலையம் அருகே ஆதிநாராயணன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்குள் கடந்த 30-ந்தேதி முகமூடி அணிந்த 2 மர்ம நபர்கள் பட்டாக்கத்தியுடன் புகுந்தனர். பின்னர் அவர்கள் அங்கிருந்த பூசாரி ராஜாவை தாக்கிவிட்டு அவரிடம் இருந்த சாவியை பிடுங்கி கோவிலை திறந்தனர். சத்தம் கேட்டு அங்குள்ள மண்டபத்தில் படுத்திருந்த பத்மநாபன் என்பவர் அங்கு வந்தார். அவரையும் அந்த நபர்கள் தாக்கினர். பின்னர் கோவிலில் இருந்த சுமார் ஒரு அடி உயரம் கொண்ட 2 வெண்கல நடராஜர் சிலைகள் மற்றும் அங்கிருந்த உண்டியலை மர்ம நபர்கள் கொள்ளையடித்துவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து அல்லிநகரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். கொள்ளையர்களை பிடிக்க இன்ஸ்பெக்டர் கண்ணன் தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்த தனிப்படையினர் கோவில் மற்றும் கோவில் செல்லும் வழிகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். இதில் கொள்ளையில் ஈடுபட்ட ஒருவர் பெரியகுளம் அருகே டி.கள்ளிப்பட்டியை சேர்ந்த சரவணக்குமார் என்ற நவீன் (வயது 22) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 2 சிலைகளும் பறிமுதல் செய்யப்பட்டது, அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தினர். அப்போது அவர், அதே ஊரை சேர்ந்த அருண் என்பவருடன் சேர்ந்து கொள்ளையில் ஈடுபட்டதாகவும், கோவிலில் கொள்ளையடித்த உண்டியல் அருணிடம் உள்ளது என்றும் தெரிவித்தார். இதையடுத்து தலைமறைவாக உள்ள அருணை போலீசார் தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story