விபத்து காப்பீடு வழக்கில் விதவைக்கு ரூ.20.15 லட்சம் வங்கி வழங்க வேண்டும்; நுகர்வோர் கோர்ட்டு உத்தரவு
விபத்து காப்பீடு வழக்கில் விதவைக்கு ரூ.20.15 லட்சத்தை வங்கி வழங்க வேண்டும் என்று பீதர் நுகர்வோர் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.
பீதர்:
விபத்து காப்பீடு
பீதர் மாவட்டம் அவுராத் தாலுகா போரல் கிராமத்தை சேர்ந்தவர் தனராஜ் மடிவாளப்பா. தனியார் நிறுவன ஊழியரான இவர் சிட்டகுப்பாவில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் ரூ.20 லட்சத்திற்கு விபத்து காப்பீடு எடுத்து இருந்தார். இதற்காக அவர் மாதந்தோறும் ரூ.1,000 கட்டி வந்தார். இதற்கிடையே அவர் தனது விபத்து காப்பீடு திட்டத்தை அவுராத் வங்கி கிளைக்கு மாற்றியதாக தெரிகிறது. இந்த நிலையில் கடந்த 2018-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 22-ந் தேதி ஒரு விபத்தில் தனராஜ் இறந்தார்.
இதையடுத்து ரூ.20 லட்சம் விபத்து காப்பீடு பணத்தை தரும்படி தனராஜின் மனைவி மகாதேவி, சிட்டகுப்பாவில் உள்ள வங்கிக்கு சென்று கேட்டு உள்ளார். அப்போது தனராஜ், அவுராத் கிளைக்கு விபத்து காப்பீடு திட்டத்தை மாற்றியதாக கூறிய வங்கி அதிகாரிகள், அவர் விபத்து காப்பீட்டிற்கான மாத தவணையை சரியாக செலுத்தவில்லை என்று கூறி ரூ.20 லட்சத்தை கொடுக்க மறுத்தனர்.
ரூ.20.15 லட்சம் வழங்க உத்தரவு
இதையடுத்து ரூ.20 லட்சம் விபத்து காப்பீடு பணத்தை வழங்க வங்கிக்கு உத்தரவிட கோரி பீதரில் உள்ள மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில் கடந்த 2019-ம் ஆண்டு மகாதேவி மனு தாக்கல் செய்தார். அந்த மனு மீதான விசாரணை கடந்த 3 ஆண்டுகளாக நடந்து வந்தது.
அப்போது வங்கி சார்பில் ஆஜரான வக்கீல், மனுதாரரின் கணவரின் சரியாக மாத தவணையை செலுத்தவில்லை என்று கூறி வாதிட்டார். ஆனால் மனுதாரரின் வக்கீல், தனது மனுதாரரின் கணவர் சரியாக மாத தவணை செலுத்தி வந்ததாகவும், கணவர் இறந்த பின்னரும் மனுதாரர் மாததவணையை கட்ட முன்வந்தார் என்றும், அதற்கு வங்கி அதிகாரிகள் உதவவில்லை என்றும் வாதிட்டார்.
இந்த நிலையில் வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில் நேற்று முன்தினம் நீதிபதி தீர்ப்பு கூறினார். அதில் கணவர் இறந்த பின்னரும் விபத்து காப்பீடு கட்ட முன்வந்த பெண்ணுக்கு வங்கி அதிகாரிகள் உதவவில்லை என்பதும், வங்கி அதிகாரிகள் அலட்சியமாக செயல்பட்டதும் நிருபணம் ஆகி உள்ளது. இதனால் பெண்ணுக்கு ரூ.20 லட்சம் விபத்து காப்பீடு பணம், வழக்கு விசாரணை அவரது மனஉளைச்சலுக்காக ரூ.15 ஆயிரமும் வங்கி வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
Related Tags :
Next Story