குற்ற சம்பவங்களை தடுக்க கண்காணிப்பு கேமரா பொருத்துங்கள்


குற்ற சம்பவங்களை தடுக்க கண்காணிப்பு கேமரா பொருத்துங்கள்
x
தினத்தந்தி 7 May 2022 9:07 PM IST (Updated: 7 May 2022 9:07 PM IST)
t-max-icont-min-icon

குற்ற சம்பவங்களை தடுக்க கண்காணிப்பு கேமரா பொருத்துங்கள்

போடிப்பட்டி, மே.8-
குற்ற சம்பவங்களைத் தடுக்க கண்காணிப்புக் கேமரா பொருத்துங்கள் என்று போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மூன்றாவது கண்
இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது
பெரும்பாலான குற்ற சம்பவங்களில் குற்றவாளிகளைக் கண்டு பிடிப்பதில் மூன்றாவது கண் எனப்படும் கண்காணிப்புக் கேமராக்களின் பங்கு பெருமளவில் உள்ளது. அத்துடன் கண்காணிப்புக் கேமராக்கள் குற்றவாளிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்துவதால் பெரும்பாலான குற்ற சம்பவங்கள் நடைபெறாமலேயே தடுக்கப்படுகிறது. ஆனால் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களில் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்துவதில் பலரும் தயக்கம் காட்டுகின்றனர்.குற்ற சம்பவங்களின் போது தங்கள் வீட்டிலுள்ள கண்காணிப்புக் கேமரா சாட்சியமாக மாறினால் தங்களுக்கு இடையூறு ஏற்படும் என்ற அச்ச உணர்வும் அதற்கு ஒரு காரணமாகும்.அதுபோன்ற சமயங்களில் போலீசாரின் ஒத்துழைப்பும் பாதுகாப்பும் நிச்சயமாக அவர்களுக்குக் கிடைக்கும். இதனால் அச்சமில்லாமல் அனைத்து பகுதிகளிலும் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். குடியிருப்போர் சங்கங்கள் மற்றும் தன்னார்வலர்கள் மூலம் அனைத்து வீதிகளிலும் கண்காணிப்புக் கேமரா பொருத்துவது குற்ற சம்பவங்களைத் தடுக்க உதவும்.
தகவல் தெரிவியுங்கள்
வீடுகளில் விலை உயர்ந்த பொருட்களை வைப்பதைத் தவிர்க்கலாம். வீட்டைப் பூட்டி விட்டு வெளியூர்களுக்குச் செல்லும் போது போலீஸ் நிலையத்தில் தகவல் தெரிவித்து விட்டுச் செல்லுங்கள்.மேலும் தற்போது கோடைக் காலமென்பதால் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கிறது.இதனால் ஒருசிலர் வீடுகளின் கதவு மற்றும் ஜன்னல்களைத் திறந்து வைத்து தூங்குகின்றனர்.இது திருடர்களுக்கு அழைப்பு விடுப்பது போன்ற செயலாகும்.கதவுகளைத் திறந்து வைத்து தூங்குவதை கண்டிப்பாக தவிருங்கள்.ஜன்னல்களைத் திறந்து வைக்க நேர்ந்தால் ஜன்னல்களுக்கு அருகில் விலை உயர்ந்த பொருட்களை வைப்பதைத் தவிருங்கள்.
சந்தேகத்துக்கிடமான நபர்களின் நடமாட்டம் தெரிய வந்தால் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவியுங்கள்.இரவு நேரங்களில் அக்கம்பக்கம் உதவி குரல் கேட்டால் பாதுகாப்பான முறையில் உதவி செய்யவும் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கவும் தயக்கம் காட்டாதீர்கள்.குற்றங்களைத் தடுக்க போலீசாருக்கு முழுமையான ஒத்துழைப்பு கொடுங்கள்.
இவ்வாறு போலீசார் கூறினர்.

Next Story