2-வது காதல் திருமணம் செய்த இளம்பெண் வெட்டிக் கொலை
ஸ்ரீவைகுண்டம் அருகே 2-வது காதல் திருமணம் செய்த இளம்பெண் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவரது தந்தை-தம்பி உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஸ்ரீவைகுண்டம்:
ஸ்ரீவைகுண்டம் அருகே 2-வது காதல் திருமணம் செய்த இளம்பெண் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவரது தந்தை-தம்பி உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
காதல் திருமணம்
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள தாதன்குளம் பகுதியை சேர்ந்தவர் சுடலைமுத்து (வயது 42). இவரது மனைவி காளியம்மாள். இவர்களது மகள் மீனா (21).
காளியம்மாள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டதால், முப்பிடாதி என்ற பெண்ணை சுடலைமுத்து 2-வதாக திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மாயாண்டி (20) என்ற மகன் உள்ளார்.
மீனாவும், கால்வாய் கிராமத்தை சேர்ந்த இசக்கிபாண்டியன் என்பவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 4 வயதில் மகன் இருக்கிறான்.
கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். இசக்கிபாண்டியனுடன் அவரது மகன் வசித்து வருகிறான்.
2-வது திருமணம்
இதற்கிடையே, நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள பட்டன்பிள்ளை புதூரை சேர்ந்த முத்து என்பவரை காதலித்து 10 மாதங்களுக்கு முன்பு வீட்டிற்கு தெரியாமல் மீனா 2-வது திருமணம் செய்து கொண்டார். இவர்கள் பாளையங்கோட்டையில் தனியாக வீடு எடுத்து வசித்து வந்தனர். மீனா 2-வது திருமணம் செய்ததை உறவினர்கள் சுடலைமுத்துவிடம் கூறி உள்ளனர். மேலும் 2-வது கணவர் முத்துவுடன் மீனா ெவளியூர்களுக்கு சுற்றுலா சென்று வந்தார். முதல் கணவர், குழந்தை இருக்கும்போது மீனா 2-வது திருமணம் செய்தது சுடலைமுத்துவுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.
வெட்டிக்கொலை
நேற்று முன்தினம் தாதன்குளத்தில் கோவில் திருவிழாவுக்கு மீனா தனது சித்தி பார்வதி வீட்டிற்கு வந்தார். இதுபற்றி அறிந்த சுடலைமுத்து, அவருடைய மனைவி முப்பிடாதி, மகன் மாயாண்டி, சுடலைமுத்துவின் அண்ணன் மனைவி வீரம்மாள், அவரது மகன் முருகன் ஆகியோருடன் அங்கு சென்றார்.
அங்கிருந்த மீனாவிடம் 2-வது திருமணம் செய்தது குறித்து கேட்டனர். அப்போது, அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த சுடலைமுத்து தான் மறைத்து வைத்து இருந்த அரிவாளால் மீனாவின் கழுத்து, தலையில் சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் ரத்த வெள்ளத்தில் மீனா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். பின்னர் அவர்கள் 5 பேரும் அங்கு இருந்து தப்பிச் சென்றுவிட்டனர்.
இதுகுறித்து உடனடியாக செய்துங்கநல்லூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீனா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
4 பேர் கைது
இதுகுறித்து மீனாவின் சித்தி பார்வதி அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய சுடலைமுத்து, மாயாண்டி, முப்பிடாதி, வீரம்மாள் ஆகிய 4 பேரையும் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள முருகனை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள். கைதானவர்களிடம் கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பரபரப்பு
மேலும் மீனா ‘செல்பி’ மோகம் கொண்டவர் என்று கூறப்படுகிறது. அவரது செல்போனில் தான் விதவிதமாக எடுத்துக்கொண்ட ‘செல்பி’ படங்கள் இருந்தது. சம்பவம் நடப்பதற்கு 1 மணி நேரத்துக்கு முன்பு கூட அவர் ‘செல்பி’ எடுத்துள்ளார். செல்போனில் அடிக்கடி டிக்-டாக் செய்து வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
ஸ்ரீவைகுண்டம் அருகே 2-வது காதல் திருமணம் செய்த இளம்பெண் சரமாரி வெட்டிக் கொலை செய்யப்பட்ட பயங்கர சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story