தண்டோரா மூலம் விழிப்புணர்வு: 29 நாட்டுத்துப்பாக்கிகள் போலீசில் ஒப்படைப்பு


தண்டோரா மூலம் விழிப்புணர்வு: 29 நாட்டுத்துப்பாக்கிகள் போலீசில் ஒப்படைப்பு
x
தினத்தந்தி 7 May 2022 10:06 PM IST (Updated: 7 May 2022 10:06 PM IST)
t-max-icont-min-icon

தண்டோரா மூலம் ஏற்படுத்தப்பட்ட விழிப்புணர்வு காரணமாக உரிமம் இல்லாத 29 நாட்டுத்துப்பாக்கிகள் போலீசில் ஒப்படைக்கப்பட்டன.

தேன்கனிக்கோட்டை:
நாட்டுத்துப்பாக்கிகள்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களையொட்டி அமைந்துள்ளது. இங்கு அதிகளவில் வனப்பகுதிகள் உள்ளன. இதில் காட்டு யானைகள், மான், குரங்கு, கரடி, காட்டுப்பன்றி உள்ளிட்ட வன விலங்குகள் அதிகளவில் உள்ளன. இவை உணவு, தண்ணீர் தேடி அடிக்கடி ஊருக்குள் நுழைந்து விவசாய நிலங்களில் சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிர்களை நாசம் செய்து வருகின்றன.
வன விலங்குகள் ஊருக்குள் நுழைவதை தடுக்க மாவட்டத்தில் பலர் உரிமம் பெற்று நாட்டுத்துப்பாக்கிகள் வைத்துள்ளனர். இதேபோல் வனவிலங்குகளை வேட்டையாட உரிமம் இல்லாத நாட்டுத்துப்பாக்கிகளை சிலர் பயன்படுத்தி வருகிறார்கள். இதனிடையே மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூர் மே 10-ந் தேதிக்குள் உரிமம் இல்லாத நாட்டுத்துப்பாக்கிகளை போலீஸ் நிலையங்களில் ஒப்படைக்க உத்தரவிட்டார். அப்படி ஒப்படைக்காத பட்சத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
ஒப்படைப்பு
இந்தநிலையில் தேன்கனிக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு கிருத்திகா மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் நாகராஜ், சுப்பிரமணி ஆகியோர் மேற்பார்வையில் நாட்டுத்துப்பாக்கிகளை போலீசில் ஒப்படைக்கக்கோரி தாலுகா முழுவதும் தண்டோரா மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் உரிமம் இல்லாத நாட்டுத்துப்பாக்கிகளை தாங்களாக முன்வந்து கொடுத்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து உரிமம் இல்லாத 29 நாட்டுத்துப்பாக்கிகள் போலீசில் ஒப்படைக்கப்பட்டன. நாட்டுத்துப்பாக்கிகளை ஒப்படைத்தவர்களுக்கு போலீசார் சால்வை அணிவித்து பாராட்டினர். 

Next Story