கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஷவர்மா விற்பனை கடைகளில் அதிகாரிகள் சோதனை
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஷவர்மா விற்பனை கடைகளில் அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். இதில் சுகாதாரமற்ற முறையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 2.6 கிலோ ஷவர்மா பறிமுதல் செய்யப்பட்டது.
கிருஷ்ணகிரி:
அதிகாரிகள் சோதனை
கேரளாவில் ஷவர்மா சாப்பிட்ட பள்ளி மாணவி ஒருவர் பலியானார். 17 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சுகாதாரமற்ற முறையில் தயாரிக்கப்பட்ட ஷவர்மாவை சாப்பிட்டதால் மாணவி உயிர் இழந்ததாக கூறப்பட்டது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் ஷவர்மா விற்பனை கடைகளில் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.
அந்த வகையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மொத்தம் உள்ள 35 கடைகளில் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் வெங்கடேசன் தலைமையில் அலுவலர்கள் சோதனை செய்ய சென்றனர். இதில் 26 கடைகள் பூட்டப்பட்டு இருந்தன. கிருஷ்ணகிரியில் 5 கடைகளிலும், ஓசூரில் 3 கடைகளிலும், ஊத்தங்கரையில் ஒரு கடையிலும் அதிகாரிகள் சோதனை செய்தனர்.
பறிமுதல்
இதில் ஷவர்மா தயாரிக்கும் விதம், பயன்படுத்தப்படும் கோழி இறைச்சி மற்றும் உணவு பொருட்கள் குறித்து கடை பணியாளர்களிடம் விசாரித்தனர். மேலும் காலாவதியாகாத, தரமான பொருட்களை கொண்டு ஷவர்மா தயாரிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்கள்.
இந்த சோதனையில் சுகாதாரமற்ற முறையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 2.6 கிலோ ஷவர்மா பறிமுதல் செய்யப்பட்டது.
இது குறித்து மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் வெங்கடேசன் கூறியதாவது:-
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஷவர்மா விற்பனை கடைகளில் ஆய்வு செய்யப்பட்டது. இதில் காலாவதியான இறைச்சிகளை பயன்படுத்த கூடாது என்று எச்சரித்துள்ளோம். முறையாக வேக வைக்கப்படாத உணவுகளால் பொதுமக்களின் உடல் நலனுக்கு பாதிப்பு உள்ளது. எனவே வாடிக்கையாளர்களுக்கு தரமான உணவு வகைகளை விற்பனை செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின்போது அலுவலர்கள் ரமேஷ், ராஜசேகர் மற்றும் பலர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story