நிதி நிறுவன அதிபரை தாக்கி நகை-பணம் பறித்த 2 பேர் கைது
நிதி நிறுவன அதிபரை தாக்கி நகை-பணம் பறித்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, பிம்பலூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் ராமர். இவரது மகன் வெங்கடேஷ் (வயது 29). நிதி நிறுவன அதிபரான இவர் சம்பவத்தன்று பெரம்பலூர் பாலக்கரை பகுதியில் உள்ள காலிமனையில் நண்பர் ஒருவருடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு பெரம்பலூர் சங்குபேட்டை நேரு தெருவை சேர்ந்த தேங்காய் மணி என்ற ராஜசேகர் (29), அதே பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் மகன் தமிழ்ச்செல்வன் (26) உள்ளிட்ட 5 பேர் வந்து வெங்கடேசை தகாத வார்த்தையால் திட்டி, கத்தியை காட்டி மிரட்டியதோடு, அவரை தாக்கி அவரது சட்டைப்பையில் இருந்த ரூ.3 ஆயிரத்தை பறித்ததோடு, அவரது மோட்டார் சைக்கிளையும், அதில் இருந்த 2 பவுன் நகைகளையும் எடுத்துக்கொண்டு கொலை மிரட்டல் விடுத்து சென்றனர்.
இதேபோல் தேங்காய் மணி, தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட சிலர் பெரம்பலூர் 19-வது வார்டு திருப்பூர் குமரன் தெருவை சேர்ந்த பாபு மகன் அருண்குமாரை(30) தகாத வார்த்தைகளால் திட்டியும், அரிவாளால் வெட்ட முயன்றும், பணம் கேட்டும் கொலை மிரட்டல் விடுத்து சென்றனர். இது குறித்த புகார்களின்பேரில் பெரம்பலூர் போலீசார் தனித்தனியாக வழக்குகள் பதிந்து தேங்காய் மணியையும், தமிழ்ச்செல்வனையும் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். தலைமறைவாகி உள்ள மற்றவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story