கல்மேல்குப்பம் கிராமத்தில் குழந்தை திருமணம் தடுத்து நிறுத்தம்
கல்மேல்குப்பம் கிராமத்தில் நடைபெற இருந்த குழந்தை திருமணத்தை கலெக்டர் பாஸ்கரபாண்டியன் தடுத்து நிறுத்தினார்.
ராணிப்பேட்டை,
கல்மேல்குப்பம் கிராமத்தில் நடைபெற இருந்த குழந்தை திருமணத்தை கலெக்டர் பாஸ்கரபாண்டியன் தடுத்து நிறுத்தினார்.
குழந்தை திருமணம்
ராணிப்பேட்டை அருகே உள்ள கல்மேல்குப்பம் கிராமத்தில் 16 வயது பெண்ணுக்கும், 25 வயதுடைய ஆணுக்கும் திருமணம் நடைபெற உள்ளதாக, சைல்டு லைன் அமைப்பினருக்கு தகவல் கிடைத்தது.
இதனைத் தொடர்ந்து திருமணம் நடைபெற இருந்த இடத்திற்கு திருமண வீட்டாரிடம் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் நேரில் சென்று குழந்தை திருமணம் செய்வது சட்டப்படி குற்றம் என்றும், குழந்தை திருமணத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் விளக்கிக் கூறினார்.
மேலும் பெண்ணிற்கு 18 வயது நிறைவடையும் வரை திருமணம் செய்யக்கூடாது என்றும் தொடர்ந்து கல்வி பயில அனுமதிக்குமாறும் பெற்றோர்களுக்கும் அங்கு கூடியிருந்த பொதுமக்களுக்கும் அறிவுரை வழங்கினார்.
நிறுத்தம்
பின்னர் திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டு தொடர்ந்து அச்சிறுமியை கல்வி கற்க வைக்கிறேன் என்று பெற்றோரிடத்தில் பத்திரத்தில் எழுதி வாங்கினார்கள். அங்கிருந்த பெற்றோர்களும், பொதுமக்களும் கட்டாயமாக 18 வயது பூர்த்தி அடைந்த பிறகு எங்களுடைய பெண்ணிற்கு திருமணம் செய்து வைக்கிறோம், கலெக்டரின் உத்தரவை கட்டாயம் கடைபிடிப்போம், மேலும் இவ்வூரில் இனிவரும் காலத்தில் 18 வயது பூர்த்தியடையாத யாருக்கும் திருமணம் செய்து வைக்க மாட்டோம். இதுகுறித்து ஜமாத்தில் உறுதி மொழி எடுத்து அனைவருக்கும் தெரிவித்துள்ளோம் என பொதுமக்கள் உறுதியளித்தனர்.
மறுவாழ்வுக்கு ஏற்பாடு
அப்போது ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லோகநாயகி, உதவி கலெக்டர் பூங்கொடி, துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபு, வாலாஜா தாசில்தார் ஆனந்தன், சைல்டு லைன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் சாம்ராஜ், நிரோஷா, மாவட்ட சமூகநலத்துறை அலுவலர் லில்லி வருவாய் ஆய்வாளர் முத்துக்குமார் மற்றும் போலீசார், அரசுப்பணியாளர்கள் உடன் இருந்தனர்.
பின்னர் கலெக்டர் பாஸ்கரபாண்டியன் கூறுகையில் ராணிப்பேட்டை மாவட்டத்தில், கடந்த 2021-ம் ஆண்டு ஏப்ரல் முதல் இதுவரை 72 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டது. அவர்களின் கல்வி வேலை வாய்ப்பு மற்றும் கல்வி மற்றும் மறுவாழ்வுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது, என்றார்.
Related Tags :
Next Story