எக்ஸ்பிரஸ் ரெயிலில் கிடந்த 12 கிலோ புகையிலை பொருட்கள்-½ கிலோ கஞ்சா


எக்ஸ்பிரஸ் ரெயிலில் கிடந்த 12 கிலோ புகையிலை பொருட்கள்-½ கிலோ கஞ்சா
x
தினத்தந்தி 8 May 2022 1:21 AM IST (Updated: 8 May 2022 1:21 AM IST)
t-max-icont-min-icon

புவனேஸ்வரம்-ராமேஸ்வரம் இடையே சென்ற எக்ஸ்பிரஸ் ரெயிலில் 12 கிலோ புகையிலை பொருட்கள்-½ கிலோ கஞ்சாவை ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் கைப்பற்றி விசாரணை செய்தனர்.

தஞ்சாவூர்:
புவனேஸ்வரம்-ராமேஸ்வரம் இடையே சென்ற எக்ஸ்பிரஸ் ரெயிலில் 12 கிலோ புகையிலை பொருட்கள்-½ கிலோ கஞ்சாவை ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் கைப்பற்றி விசாரணை செய்தனர்.
எக்ஸ்பிரஸ் ரெயிலில் சோதனை
ரெயில்களில் மதுப்பாட்டில்கள், கஞ்சா, தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடத்தப்படுவதை தடுக்கவும், கடத்தல் சம்பவத்தில் ஈடுபடுவோரை பிடிக்கவும் ரெயில்வே பாதுகாப்பு படை கோட்ட முதுநிலை ஆணையர் ராமகிருஷ்ணன் உத்தரவின்படி சிறப்பு படை அமைக்கப்பட்டுள்ளது.
அதன்படி திருச்சி ரெயில்வே பாதுகாப்பு படை குற்றத்தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வாசுதேவன் தலைமையில் ஏட்டுகள் கார்த்திகேயன், குமார் ஆகியோர் அடங்கிய சிறப்பு படையினர் நேற்று திருச்சியில் இருந்து புறப்பட்ட சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஏறி சோதனை செய்தனர். கும்பகோணம் வரை சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஒவ்வொரு பெட்டியாக சென்று சோதனை செய்தனர். ஆனால் எதுவும் சிக்கவில்லை.
கஞ்சா-புகையிலை பொருட்கள்
இதனால் கும்பகோணத்தில் கீழே இறங்கிய சிறப்பு படையினர் புவனேஸ்வரத்தில் இருந்து ராமேஸ்வரம் நோக்கி சென்ற ரெயிலில் ஏறி ஒவ்வொரு பெட்டியாக சென்று சோதனை மேற்கொண்டனர். தஞ்சையை அடுத்த ஆலக்குடி-பூதலூருக்கு இடையே ரெயில் சென்றபோது 2 பெட்டிகளை இணைக்கக்கூடிய இடத்தில் சந்தேகப்படும்படி பை ஒன்று இருந்தது. அந்த பையை சிறப்பு படையினர் சோதனை செய்தபோது அதனுள் பாட்டில்கள் இருந்தன. அந்த பாட்டில்களை திறந்து பார்த்தபோது அவற்றில் கஞ்சா கலந்த பீடித்தூள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும் பையின் அருகே கிடந்த பிளாஸ்டிக் பையில் ½ கிலோ கஞ்சா இருந்தது. மேலும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவற்றை எல்லாம் சிறப்பு படையினர் கைப்பற்றினர். மொத்தம் 12 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களும், ½ கிலோ கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டது.
விசாரணை
பறிமுதல் செய்யப்பட்ட இவைகள் அனைத்தும் திருச்சி ரெயில்வே போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும் புகையிலை பொருட்கள் மற்றும் கஞ்சாவை கடத்தி வந்தது யார்? அவர்கள் எந்த ஊருக்கு இவைகளை கடத்தி செல்கின்றனர் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story