பெற்றோரை மாணவர்கள் மறக்கக்கூடாது


பெற்றோரை மாணவர்கள் மறக்கக்கூடாது
x
தினத்தந்தி 8 May 2022 1:40 AM IST (Updated: 8 May 2022 1:40 AM IST)
t-max-icont-min-icon

உடலில் கடைசி துளி ரத்தம் இருக்கும் வரை பெற்றோரை மாணவர்கள் மறக்கக்கூடாதுஎன்று தஞ்சையில் நடந்த மருதுபாண்டியர் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் திருவாரூர் மத்திய பல்கலைக்கழக துணைவேந்தர் கிருஷ்ணன் பேசினார்.

தஞ்சாவூர்:
உடலில் கடைசி துளி ரத்தம் இருக்கும் வரை பெற்றோரை மாணவர்கள் மறக்கக்கூடாதுஎன்று  தஞ்சையில் நடந்த மருதுபாண்டியர் கல்லூரி பட்டமளிப்பு விழாவில்  திருவாரூர் மத்திய பல்கலைக்கழக துணைவேந்தர் கிருஷ்ணன் பேசினார். 
பட்டமளிப்பு விழா
தஞ்சை மருதுபாண்டியர் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா நேற்று கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. விழாவிற்கு மருதுபாண்டியர் கல்வி நிறுவனங்களின் தலைவர் மருதுபாண்டியன் தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் விஜயா வரவேற்றார்.
விழாவில் திருவாரூர் மத்திய பல்கலைக்கழக துணைவேந்தர் கிருஷ்ணன் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
பட்டம் பெற்ற மாணவர்கள், உங்கள் வாழ்வில் நீங்கள் படித்த கல்வி நிறுவனங்கள், உங்களுக்கு கற்றுக்கொடுத்த ஆசிரியர்கள், பெற்றோர்களை வாழ்வில் என்றைக்கும் மறக்கக்கூடாது. நீங்கள் பட்டம் பெற உங்கள் பெற்றோர் தூக்கம், சொத்துக்களை துறந்துள்ளனர். எனவே கடைசி துளி ரத்தம் உடலில் இருக்கும் வரை அவர்களை மறக்கக்கூடாது.
தனித்திறன்
ஒவ்வொரு ஊருக்கும் ஒரு சிறப்பு உண்டு. திண்டுக்கல் என்றால் பூட்டு, விருதுநகர் என்றால் காராச்சேவு, தஞ்சை என்றால் தலையாட்டி பொம்மை தான். நாம் எப்படி சாய்த்தாலும் எழுந்து நிற்பேன் என்பதை உணர்த்துவது தலையாட்டி பொம்மை தான். ஒவ்வொருவரும் ஒரு தனித்திறனை வளர்த்துக்கொள்ள வேண்டும். அதே போன்ற நீங்கள் வாழ்ந்த பகுதி, கிராமத்தை முன்னேற்றம் அடைய செய்ய வேண்டும்.நீங்கள் கடுமையாக உழைத்தால், முயற்சி செய்தால் வாழ்வில் வெற்றி பெற முடியும். எந்த தொழில் செய்தாலும் ஒற்றுமையாக இருந்து முன்னேற்றம் அடைய செய்ய வேண்டும். உங்கள் கிராமம், நகரத்தின் தேவை அறிந்து செயல்பட வேண்டும். கொரோனாவுக்கு 2 ஆண்டுகளில் மருந்து கண்டுபிடித்ததை போல எச்.ஐ.வி. போன்ற உயிர்கொல்லி நோய்க்கும் மருந்து கண்டுபிடிக்க வேண்டும். நமது தயாரிப்பு, உற்பத்தி பொருட்களை மற்ற நாடுகள் கவர்ந்து இழுக்க செய்ய வழிவகை செய்ய வேண்டும். அப்போது தான் நமது நாடு உயர்ந்த நாடாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
600 மாணவர்களுக்கு பட்டம்
விழாவில் இளநிலை மாணவ, மாணவிகள் 268 பேருக்கும், முதுநிலை மாணவ, மாணவிகள் 155 பேருக்கும், ஆய்வில் நிறைஞர் மாணவர்கள் 172 பேருக்கும், பல்கலைக்கழக தரவரிசையில் 5 மாணவர்களுக்கும் என 600 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன.
விழாவில் கல்லூரி துணை முதல்வர் தங்கராஜ், ஆராய்ச்சி மைய ஒருங்கிணைப்பாளர் அர்ஜூனன், மூத்த வக்கீல் சுப்பிரமணியன், ஓய்வு பெற்ற பேராசிரியர் பூவலிங்கம், கல்வியியல் கல்லூரி முதல்வர் சுப்பிரமணியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை மேலாளர் கண்ணன் மற்றும் பேராசிரியர்கள் செய்திருந்தனர்.

Next Story