தஞ்சையில் தேங்காய் பூ விற்பனை அமோகம்
தஞ்சையில் தேங்காய் பூ விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. இதை மக்கள் ஆர்வத்துடன் வாங்கி சென்றனர்.
தஞ்சாவூர்:
தஞ்சையில் தேங்காய் பூ விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. இதை மக்கள் ஆர்வத்துடன் வாங்கி சென்றனர்.
இளநீர், தேங்காய்
தென்னை மரத்தை பற்றி அறியாதவர்கள் யாரும் இல்லை. தென்னை மரத்தில் எல்லாமே மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கிறது. தென்னம்பாளை அரும் மருந்தாக பயன்படுகிறது. இயற்கை நமக்கு கொடுத்த அற்புத வரம் தான் இளநீர். கோடை காலங்களில் வெயிலின் வெக்கையை தணித்து, உடல் உஷ்ணத்தை குறைக்க பயன்படுகிறது.
தேங்காய் பயன்பாடு இல்லாத வீடுகளே இல்லை. தேங்காய் சமையலில் பெரும்பங்கு வகிக்கிறது. தேங்காய் அளவுக்கு மீறி முற்றி இருந்தால் உள்ளிருக்கும் தேங்காய் நீர் முற்றிலுமாக வற்றிவிடும். அப்படி முற்றிய தேங்காயை கொப்பரை தேங்காய் ஆகும். கொப்பரை தேங்காய் எண்ணெய் எடுக்க பயன்படுகிறது. எண்ணெய் எடுத்த பிறகு உள்ள தேங்காய் கழிவு புண்ணாக்கு ஆகும். புண்ணாக்கு கால்நடைகளுக்கு உணவாக பயன்படுகிறது. தென்னங்குருத்து உணவாக பயன்படுத்தப்படுகிறது.
தேங்காய் பூ
இதைபோல் தேங்காய் பூவும் உணவாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இளநீர், தேங்காய், தேங்காய் பால் போன்றவற்றை நாம் அடிக்கடி பருக முடிந்தாலும் தேங்காய் பூ என்பது அரிதாக கிடைக்கும் ஒன்று. ஏனென்றால் தேங்காய் பூ கிடைக்க முற்றிய தேங்காயை மண்ணில் புதைத்து வைக்க வேண்டும். தேங்காய் பூ என்பது முற்றிய தேங்காயில் உண்டாகும் கருவளர்ச்சியே ஆகும்.
தேங்காய் பூவில், தேங்காய் மற்றும் இளநீரில் இருப்பதை விட அதிக சத்துக்கள் உள்ளது. இளநீரில் இருக்கும் சதை பற்றினை போல ருசி இருக்கும். அதன் நன்மைகளை பற்றி தெரிந்தால் தேங்காய் பூவை தேடி கண்டுபிடித்து சாப்பிட தோன்றும். பல்வேறு மருத்துவ குணங்களை கொண்ட தேங்காய் பூ சென்னை போன்ற நகரங்களில் விற்பனை செய்யப்பட்டு வந்தது.
மக்கள் ஆர்வம்
தற்போது காவிரிடெல்டா மாவட்டங்களிலும் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. தஞ்சை கீழவஸ்தாசாவடி அருகே மன்னார்குடி-பட்டுக்கோட்டை பிரிவு சாலை பகுதியில் தேங்காய் பூ விற்பனைக்காக முளைத்த தேங்காய்கள் குவித்து வைக்கப்பட்டுள்ளது. முளைத்த தேங்காயை வெட்டி அதனுள் இருக்கும் பூ வை விற்பனைக்காக தரம் வாரியாக பிரித்து வைக்கப்பட்டுள்ளது.
ஒரு தேங்காய் பூ ரூ.50 முதல் ரூ.80 வரை விற்பனை செய்யப்படுகிறது. அந்த வழியாக வாகனங்களில் செல்பவர்கள் தேங்காய் பூவை பார்த்தவுடன் வாகனங்களை நிறுத்திவிட்டு வந்து ஆர்வமுடன் வாங்கி சாப்பிடுகின்றனர். சிலர் வீட்டிற்கு வாங்கி செல்கின்றனர்.
ஊட்டச்சத்துகள்
இது குறித்து மக்கள் கூறும்போது, கோவிலில் தேங்காய் உடைக்கும்போது தேங்காயில் பூ இருந்தால் அதனை நல்ல சகுனமாக நாம் கருதுவது உண்டு. அறிவியல் பூர்வமாக பார்த்தால் தேங்காய் பூ என்பது நன்கு முற்றிய தேங்காயில் இருந்து உண்டாகுகின்ற தேங்காயின் கருவளர்ச்சி தான். தேங்காயிலும், தேங்காய் தண்ணீரிலும், இளநீரிலும் எவ்வளவு ஊட்டச்சத்துகள் இருக்கிறதோ அதைவிட மிக அதிக அளவிலான ஊட்டச்சத்துகள் இந்த தேங்காய் பூவில் உண்டு. இந்த தேங்காய் பூ தஞ்சை மாவட்டத்திலும் விற்பனைக்கு வந்துள்ளது மகிழ்ச்சியாக இருக்கிறது என்றனர்.
தேங்காய் பூ வியாபாரிகள் கூறும்போது, நாங்கள் சென்னையில் 14 ஆண்டுகளாக தேங்காய் பூ விற்பனை செய்து வருகிறோம். ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து மொத்தமாக முளைத்த தேங்காயை கொள்முதல் செய்து தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் விற்பனை செய்கிறோம். 27 வகையான மருத்துவ குணம் உள்ள தேங்காய் பூவை மக்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர். திருமணம் போன்ற விஷேசத்திற்கு தேவை என்றாலும் அனுப்பி வைக்கிறோம் என்றனர்.
Related Tags :
Next Story