ஐ.ஆர்.சி.டி.சி. இணைய தள தொழில்நுட்ப கோளாறால் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாமல் பயணிகள் அவதி


ஐ.ஆர்.சி.டி.சி. இணைய தள தொழில்நுட்ப கோளாறால் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாமல் பயணிகள் அவதி
x
தினத்தந்தி 8 May 2022 1:55 AM IST (Updated: 8 May 2022 1:55 AM IST)
t-max-icont-min-icon

இந்திய ரெயில்வேயின் ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளத்தில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக நேற்று ஆன்லைனில் முன்பதிவு, முன்பதிவு ரத்து செய்ய முடியாமல் பயணிகள் கடும் அவதிக்குள்ளாயினர்.

மதுரை
இந்திய ரெயில்வேயின் ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளத்தில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக நேற்று ஆன்லைனில் முன்பதிவு, முன்பதிவு ரத்து செய்ய முடியாமல் பயணிகள் கடும் அவதிக்குள்ளாயினர்.
ஐ.ஆர்.சி.டி.சி.
இந்திய ரெயில்வேயின் துணை நிறுவனமாக ஐ.ஆர்.சி.டி.சி. மூலம் ஆன்லைனில் ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி உள்ளது. ஆன்லைனில் முன்பதிவு செய்யும் போது, கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
மதுரை ரெயில் நிலையத்தில் 8 முன்பதிவு டிக்கெட் கவுண்ட்டர்கள் செயல்பட்டு வந்த நிலையில் தற்போது 3 கவுண்ட்டர்கள் மட்டுமே செயல்படுகிறது. அதிலும், ஒரு கவுண்ட்டர் 20 நபர்களுக்கு மேல் பயணம் செய்யும் முன்பதிவு டிக்கெட் கவுண்ட்டராக உள்ளது. இதனால், பயணிகள் நீண்டவரிசைகளில் காத்திருந்து டிக்கெட் முன்பதிவு செய்ய வேண்டியுள்ளது. இந்த கூட்ட நெரிசலை சமாளிக்க ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்து வருகின்றனர்.
தொழில்நுட்ப கோளாறு
முன்பதிவு ரத்து விதிகளின் படி, இருக்கை உறுதி செய்யப்பட்ட டிக்கெட்டுகள், காத்திருப்போர் பட்டியலில் உள்ள டிக்கெட்டுகள் ஆகியவற்றை ரெயில் புறப்படுவதற்கு 4 மணி நேரத்திற்கு முன்னதாக ரத்து செய்ய வேண்டும். இதில் இருக்கை உறுதி செய்யப்பட்ட டிக்கெட்டுகளுக்கு, 2-ம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிக்கு ரூ.120, காத்திருப்போர் பட்டியல் டிக்கெட்டுக்கு ரூ.60 முன்பதிவு கட்டணமாக பிடித்தம் செய்யப்படும். குளிரூட்டப்பட்ட பெட்டிகளில் அதிகபட்சமாக ரூ.240 வரை பிடித்தம் செய்யப்படும். இருக்கை உறுதி செய்யப்பட்ட டிக்கெட்டுகளை ரெயில் புறப்படுவதற்கு 4 மணி நேரத்திற்கு முன்னதாக ரத்து செய்தால் 50 சதவீத கட்டணம் பிடித்தம் செய்யப்படும். இந்த காலகட்டத்துக்கு பின்னர் ரத்து செய்யும் போது, கட்டணம் திரும்ப கிடைக்காது.
காத்திருப்போர் பட்டியல் முன்பதிவு டிக்கெட்டை ரெயில் புறப்படுவதற்கு ½ மணி நேரம் முன்னதாக ரத்து செய்தால் குறைந்தபட்சமாக ரூ.60 முதல் அதிகபட்சமாக ரூ.240 வரை கட்டண பிடித்தம் செய்யப்படும். இந்த காலகட்டத்துக்கு பின்னர் முன்பதிவை ரத்து செய்ய முடியாது. அதாவது, டிக்கெட் முன்பதிவு செய்தால் பயணம் செய்ய வேண்டும். இந்த நிலையில், ஆன்லைனில் முன்பதிவு ரத்து செய்யும் போது, தொழில்நுட்ப கோளாறு காரணமாக நிறைய குளறுபடிகள் ஏற்படுகிறது. 
இதுபோன்ற சந்தர்ப்பங்களில் ஆன்லைனில் முன்பதிவு செய்த பெரும்பாலான பயணிகளுக்கு டிக்கெட்டை ரத்து செய்யும் போது கட்டணத்தை திரும்ப பெற முடியாத நிலை உள்ளது.
பயணிகள் அவதி
இதற்கிடையே, நேற்று காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம் வேலை செய்யவில்லை. இதனால், ஆன்லைனில் முன்பதிவு செய்யலாம் என காத்திருந்த பயணிகளுக்கு பெருத்த ஏமாற்றமே மிஞ்சியது. குறிப்பாக குறிப்பிட்ட கால இடைவெளியில் முன்பதிவு டிக்கெட்டை ரத்து செய்ய விரும்பிய பயணிகள் கடும் அவதிக்குள்ளாயினர். அவர்களுக்கு குறைந்தபட்ச முன்பதிவு கட்டணம் கிடைப்பது கேள்விக்குறியானது.
ஏற்கனவே, ரெயில்களில் டிக்கெட் பரிசோதகர் பற்றாக்குறையால் பயணத்தின் போது முன்பதிவை பகுதியாக ரத்து செய்யும் பயணிகளுக்கு டிக்கெட் கட்டணம் திரும்ப கிடைப்பதில் சிக்கல் உள்ளது.
தற்போது அடிக்கடி தொழில்நுட்ப கோளாறு ஏற்படுவதால், பயணிகளின் பயணம் தடைபடுகிறது. இதற்கு மாற்றாக முன்பதிவு ரத்து விதிகளில் மாற்றம் செய்ய வேண்டும் என்று பயணிகள் தரப்பில் வலியுறுத்தப்படுகிறது.

Next Story