ஐ.டி. ஊழியரின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை
ஐ.டி. ஊழியரின் சாவில் சந்தேகம் இருப்பதாக அளிக்கப்பட்ட புகாரின்பேரில் உடல் தோண்டி எடுக்கப்பட்டு அதே இடத்தில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
வேலூர்
ஐ.டி. ஊழியரின் சாவில் சந்தேகம் இருப்பதாக அளிக்கப்பட்ட புகாரின்பேரில் உடல் தோண்டி எடுக்கப்பட்டு அதே இடத்தில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
ஐ.டி. ஊழியர்
வேலூர் சாய்நாதபுரம் பொன்னியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சோமசேகர் (வயது 45). இவர் சென்னையில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவருடைய மனைவி பேபிகலா (40). இருவருக்கும் முதல் திருமணமாகி விவாகரத்துக்கு பின்னர் கடந்தாண்டு சென்னை முகப்பேரில் உள்ள கோவில் ஒன்றில் வைத்து 2-வது திருமணம் செய்து கொண்டனர். கொரோனா வைரஸ் பரவல் காரணமாக சோமசேகர் வீட்டில் இருந்தபடியே பணியாற்றி வந்தார். சோமசேகரும் அவருடைய தாயாரும் வீட்டை விட்டு வெளியே செல்லும்போது பேபிகலாவை வீட்டின் உள்ளே வைத்து பூட்டிவிட்டு சென்றதாகவும், இருவரும் அவரை தரக்குறைவான வார்த்தைகளால் திட்டியதாகவும் கூறப்படுகிறது.
அதேபோன்று கடந்த மாதம் 19-ந் தேதி பேபிகலாவை வீட்டில் வைத்து இருவரும் பூட்டி சென்றனர். அதனால் விரக்தி அடைந்த அவர் போலீசாருக்கு அது குறித்து செல்போனில் தெரிவித்துள்ளார்.
அதன்பேரில் பாகாயம் போலீசார் அங்கு சென்று வீட்டை திறந்து பேபிகலாவை வெளியே கொண்டு வந்தனர். அதைத்தொடர்ந்து அவர் பாகாயம் போலீசில் கணவர், மாமியார் மீது புகார் அளித்துவிட்டு சென்னையில் உள்ள தாய் வீட்டுக்கு சென்றார்.
சாவில் சந்தேகம்
இந்த நிலையில் கடந்த மாதம் 28-ந் தேதி பேபிகலா தனது உறவினர்களுடன் பாகாயம் போலீஸ் நிலையம் சென்று வழக்கு தொடர்பாக கணவரை அழைத்து விசாரணை செய்யும்படியும், மேலும் அவருடன் சேர்த்து வைக்குமாறும் கூறி உள்ளார். இதையடுத்து போலீசார், சோமசேகரின் செல்போனை தொடர்பு கொண்டனர். அப்போது மறுமுனையில் பேசிய அவரது உறவினர்கள் சோமசேகர், 21-ந் தேதி உடல்நலக்குறைவால் உயிரிழந்து விட்டதாகவும். மறுநாள் அவருடைய உடலை வேலப்பாடியில் உள்ள சுடுகாட்டில் புதைத்து இறுதிசடங்கு செய்து விட்டதாகவும் தெரிவித்தனர்.
இந்த தகவலை அறிந்ததும் பேபிகலா கடும் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அவர், தனது கணவரின் இறப்பு குறித்து மாமியார் மற்றும் உறவினர்களிடம் ஏன் எந்த தகவலும் தெரிவிக்கவில்லை என்று கேட்டார்.
அதற்கு உறவினர்கள், பேபிகலாவின் செல்போன் எண் இல்லாததால் சோமசேகர் உயிரிழந்தது குறித்து தகவல் தெரிவிக்க முடியவில்லை என்று கூறினர்.
உடல் தோண்டி எடுப்பு
அதையடுத்து பேபிகலா தனது கணவர் சாவில் சந்தேகம் இருப்பதாகவும், அவருடைய உடலை பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்று பாகாயம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் வேலூர் தாசில்தார் செந்தில், பாகாயம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் முன்னிலையில் சோமசேகர் உடல் தோண்டி எடுக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து அடுக்கம்பாறை அரசு மருத்துவமனை டாக்டர் கலைசெல்வி சம்பவ இடத்திலேயே பிரேத பரிசோதனை செய்தார்.
பிரேத பரிசோதனை அறிக்கை வந்தபின்னரே சோமசேகரின் உயிரிழப்பிற்கான உண்மையான காரணம் தெரிய வரும். ஓரிரு நாளில் பிரேத பரிசோதனை அறிக்கை வந்துவிடும் என்று போலீசார் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story