பா.ஜனதா மேலிடம் பணம் கேட்டதாக கூறவில்லை; யத்னால் எம்.எல்.ஏ. திடீர் ‘பல்டி’
முதல்-மந்திரி பதவிக்கு ரூ.2,500 கோடி பேரம் பேசிய விவகாரத்தில் பா.ஜனதா மேலிடம் பணம் கேட்டதாக நான் கூறவில்லை என்று யத்னால் எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்.
விஜயாப்புரா:முதல்-மந்திரி பதவிக்கு ரூ.2,500 கோடி பேரம் பேசிய விவகாரத்தில் பா.ஜனதா மேலிடம் பணம் கேட்டதாக நான் கூறவில்லை என்று யத்னால் எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்.
ரூ.2,500 கோடியால் சர்ச்சை
முதல்-மந்திரி பதவிக்கு டெல்லியை சேர்ந்த இடைத்தரகர்கள் ரூ.2,500 கோடி கேட்பதாக பா.ஜனதா கட்சியை சேர்ந்த யத்னால் கூறி இருந்தார். இந்த விவகாரம் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அதே நேரத்தில் முதல்-மந்திரி பதவிக்காக பா.ஜனதா மேலிடம் ரூ.2,500 கோடி கேட்பதாக காங்கிரஸ் தலைவர்கள் கூறி வருகிறார்கள். மேலும் இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இதுகுறித்து விஜயாப்புராவில் நேற்று யத்னால் எம்.எல்.ஏ.விடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:-
பா.ஜனதா மேலிடம் கேட்டதாக...
முதல்-மந்திரி பதவிக்கு ரூ.2,500 கோடி கொடுக்கும்படி பா.ஜனதா மேலிடம் கேட்டதாக தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருகிறது. நான் அவ்வாறு கூறுவில்லை. நான் கூறியதை திரித்து பா.ஜனதா மேலிடம் பணம் கேட்பதாக கூறி வருகின்றனர். முதல்-மந்திரி பதவிக்காக பா.ஜனதா மேலிடம் பணம் கேட்கவில்லை. என்னை ஒருவர் தொடர்பு கொண்டு பேசி மோடி, சோனியா காந்தி, தேவேகவுடா தெரியும் என்று கூறினார்.
அவர் தான் முதல்-மந்திரி பதவிக்கு ரூ.2,500 கோடி பேரம் பேசினார். சோனியா காந்தியை அந்த நபர் சந்தித்து பேசி இருப்பதாகவும் கூறினார். பிரதமராக மோடி இருக்கும் போது பா.ஜனதாவில் முதல்-மந்திரி பதவிக்கு பணம் கேட்கும் சம்பவம் நடைபெறுமா?. அதற்கு சாத்தியமே இல்லை. பிரதமராக மோடி இருக்கும் போது பா.ஜனதாவில் சீட்டுக்காக பணம் கேட்கவே முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story